கைகளை கழுவுவதால் நோய் தீருமா என்ற எண்ணம் சிலருக்குத் தோன்றலாம். ஆம். காற்றின் மூலமும், நீரின் மூலமும், மற்ற பொருட்களைத் தொடுவதன் மூலமும் பரவும் நோய்கள் ஏராளம். இப்படிப்பட்ட நோய்கள் பரவாமல் தடுக்க கைகளை கழுவுதல் மிகவும் முக்கியமானது.
இன்று உலக அரங்கில் சுகாதாரத்தை முன்னிறுத்தி சொல்லப்படும் விஷயங்களில் கை கழுவும் முறைதான் முதன்மையாக உள்ளது. உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ம் நாளை உலக கை கழுவும் நாளாக அறிவித்துள்ளது.
இந்நாளில் கை கழுவும் முறை பற்றியும், அதனால் உண்டாகும் நன்மை பற்றியும் உலகம் முழுவதும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
இந்தியாவில், கைகளை ஒழுங்காக கழுவாமல் சாப்பிடுவதால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நோயால் வருடத்திற்கு 5 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இதே காரணத்திற்காக உலக அளவில் 29 லட்சம் குழந்தைகள் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அடிக்கடி உண்டாகும் வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வாந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல நோய்களுக்கு அடிப்படைக் காரணம் அவர்கள் கைகளை ஒழுங்காக சுத்தம் செய்யாமல் இருப்பதே. ஸ்டெபைலோகாக்கஸ் ஆரியஸ் (Staphylococus Aureus) என்ற கிருமி நகங்களின் இடுக்குகளில் ஒட்டிக்கொண்டு உணவருந்தும் சமயம் உட்சென்று குடலில் பல்கிப் பெருகி நோயைத் தோற்றுவிக்கிறது.
எங்கு எவ்வாறு கைகழுவ வேண்டும்?
* காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு தான் பல் துலக்க வேண்டும்.
* மலம் கழித்தபின் சோப்பு போட்டு கைகளை கழுவுவது நல்லது.
* எந்த வேலை செய்தாலும், உடனே கைகழுவுதல் வேண்டும். சமைத்த பின்பு கூட பெண்கள் கைகளை கழுவுவது நல்லது.
* வாகனம் ஓட்டி வந்தபின்பும், உடனே கை கழுவுதல் நல்லது.
* குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவு கொடுப்பதற்கு முன்பும், அவர்களது கைகளை நன்கு சுத்தமாக கழுவிய பின்பே கொடுக்க வேண்டும். இந்த பழக்கத்தை அவர்கள் சீராக கடைப்பிடிக்கும்படி செய்ய வேண்டும்.
* கைகளை அவசர அவசரமாக 2-3 வினாடிகளில் கழுவக் கூடாது. குறைந்தது 30 வினாடியாவது கை கழுவுவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
* அதிக ரசாயனம் கலந்த சோப்புகள், கிரீம்களை பயன்படுத்தக்கூடாது.
* கைகளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். நக இடுக்குகளில் தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். இந்த முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலே, நோய்கள் நெருங்காத வண்ணம் 60 விழுக்காடு தடுக்கலாம்.

0 Comments