மட்டக்களப்பு நகரில் பட்டப் பகலில் படுவான்கரையைச் சேர்ந்த பெண்ணொருவரிடமிருந்து கொடி, மாலை, காப்பு என்பன அபகரித்துச் செல்லப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதன்கிழமை காலை நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக சுமார் மூன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான மேற்படி பொருட்களை இழந்த திருமதி மேகலா பத்மநாதன் என்பவர் தகவல் தருகையில் கூறியதாவது,
புதன்கிழமை காலை மண்டபத்தடியிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு ஒருதேவையின் நிமித்தம் சென்றேன். அரசடி மக்கள் வங்கிக்கு சமீபமாக சென்ற போது எதிர்கொண்ட ஒருபெண் சிங்களத்தில் கதைத்தார். நான் ஒன்றும் விளங்கவில்லை என்று கூறி நடந்தேன்.
அப்போது பின்னால் இருந்து வந்த ஓர் ஆண் என்னை மறித்து அப்பெண் என்ன கேட்டாள் என்று தமிழில் கேட்டார். அப்போது அவர் தனது கைக்குள் இருந்து ஒரு கல்லை என்னிடம் காட்டினார். பின்னர் இருவரும் என்னை அழைத்துக் கொண்டு பொலிஸ் நிலையம் முன்பாக திருமலை வீதியூடாக லொயிட்ஸ் அவனியுக்கு சென்றனர்.
அங்கு வைத்து என்னை மிரட்டி எனது நகைகளை அபகரித்துச் சென்றனர். அப்போது எனக்கு இலேசான மயக்கம் இருந்தது. இதனால் அந்த இடத்தில் அமர்ந்து விட்டேன்.
பின்னர் மயக்கம் தெளிந்து அழுது கொண்டு முனைவீதி குறுக்காக உள்ள அறிமுகமான நகைக் கடை ஒன்றுக்கு சென்று எனது வீட்டாருக்கு தகவல் அனுப்பினேன். பின்பு மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்தேன்.
அவர்கள் என்னிடம் காட்டிய கல் மயக்கத்தை அல்லது வசியத்தை ஏற்படுத்தும் கல்லாக இருக்க வேண்டும். எனவே, அவதானமாக இருக்குமாறு பொது மக்களை கேட்டுக் கொள்கிறேன். எனக்கு நேர்ந்த கதி வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது என்றார்.


0 Comments