Subscribe Us

தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு கட்டாயம் விலைப்பட்டியல் வழங்க வேண்டும்!

தனியார் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளும் நோயாளிகளுக்கு கட்டாயம் முழு விபரங்கள் அடங்கிய விலைப்பட்டியல் வழங்கப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.

நோயாளிக்கு வழங்கப்பட்ட மருந்து மாத்திரைகளின் அளவு, அதற்கான விலைகள், விற்றமின் வகைகளின் பெயர்கள் அதன் அளவுகள் மற்றும் விலைகள், சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், கருவிகள் அதற்கான கட்டணங்கள் உள்ளிட்ட சகல விபரங்களையும் உள்ளடக்கி விலைப்பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.

இந்த உத்தரவினை மீறிச் செயற்படும் தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக நுகர்வோர் விவகார சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தனியார் வைத்தியசாலைகளில் பதிவு செய்யும் பேரவைக்கும் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கும் இடையில் இன்று விசேட பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

பல தனியார் வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்கு முழு விபரங்கள் அடங்கிய விலைப்பட்டியல்களை வழங்குவதில்லை எனவும் இதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

தனியார் வைத்தியசாலைகள் கூடுதல் விலையை அறவீடு செய்வதாக அடிக்கடி முறைப்பாடு செய்யப்படுவதாக மேலும் தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகளை கவனத்திற் கொண்டு, இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2003ம் ஆண்டு 9ம் இலக்க நுகர்வோர்வ விவகார அதிகாசபையின் 10(1)(அ) சரத்தின் அடிப்படையில் தனியார் வைத்தியசாலைகள் நோயாளிகளுக்கு பூரண விபரங்கள் அடங்கிய விலைப்பட்டியல் வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments