இலங்கையில் மீண்டும் ஒருமுறை, என்றிக்கின் “லவ் அன்ட் செக்ஸ்” போன்ற இசை நிகழ்வுகள் நடத்தப்படுவதற்கு அனுமதியளிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி, கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற வெளிநாட்டு கலைஞரொருவரின் பங்குபற்றலில் அண்மையில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
உலகப் பிரசித்தி பெற்ற பாடகரான என்ரிக் இக்லேசியஸ் (Enrique Iglesias) பங்குபற்றிய ‘ENRIQUE IGLESIAS LIVE IN COLOMBO’ என்ற குறித்த நிகழ்ச்சியை ‘Live Events’ என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
Live Events நிறுவனத்தின் உரிமையாளர்கள் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் ஆவர்.
இந்நிகழ்ச்சி நடத்தப்பட்ட விதம் தொடர்பில் நாடு முழுவதும் மற்றும் சமூகவலைதளங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான காரணம் இந்நிகழ்சியின் போது அரங்கேறிய இலங்கையின் கலச்சாரத்திற்கு பொருந்தாத அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தமையாகும்.
“கடந்தவாரம் கொழும்பில் நடைபெற்ற வெளிநாட்டு கலைஞர் பங்குபற்றிய இசை நிகழ்ச்சியின் போது 5000 முதல் 50,000 வரை டிக்கெட்டுக்கள் விற்கப்பட்டன, உள்ளே நுழைந்ததும் டிக்கெட்டின் விலைக்கமைய குடி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் இதிலே அநாகரிகமான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் என்னால் பேசாமல் இருக்க முடியாது. நாட்டில் கலாச்சாரத்துக்கு பாதிப்பு ஏற்படுமானால் அது தொடர்பில் பேசவேண்டியுள்ளது.
ஒரு மணித்தியாலம் இடம்பெற்ற இந்நிகழ்வில் நமது இளைஞர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை ஊடகங்கள் வாயிலாக பார்க்க முடிந்தது.
இந்த இசை நிகழ்வின்போது யுவதி ஒருவர் தமது மேற்சட்டையை கழற்றி பாடகர் பாடிக் கொண்டிருந்த மேடையை நோக்கி வீசிய சம்பவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இது நாட்டை பிழையான வழிக்கு இட்டுச்செல்லும் நிகழ்வாகும். இதற்காக ஏற்பாட்டாளர்கள் வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பெண்கள் தமது மார்புக் கச்சையை கழற்றி அப்பாடகருக்கு வழங்கினர். பின்னர் இளம் பெண்கள் மேடை மீது ஏறி பாடகரை கட்டியணைத்துகொண்டனர். பிரண்டி , விஸ்கியினால் ஏற்பட்ட வெறியே அது. அவர்களுக்கு நான் கூறவில்லை இதனை ஏற்பாடு செய்தோரைக் கூறுகின்றேன், அவர்களை திருக்கை வாலால் அடிக்கவேண்டும்” என்றார்.
மேலும் இனிமேல் இவற்றுக்கு இடமளிக்கப்போவதில்லையெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


0 Comments