Subscribe Us

சிரியாவில் ஆட்சிமாற்றம் தொடர்பாக ஒத்துழைக்க தயாராக உள்ளதாக ரஷியா, ஈரான் அறிவிப்பு


சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத் குடும்பத்தினர் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் பதவி விலகி ஜனநாயக ஆட்சி மலரவும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது அது கலவரமாக மாறி 5-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

போராட்டக்காரர்களில் சிலர் அண்டை நாடுகளில் இருந்து போராயுதங்களை வாங்கி ராணுவத்துடன் போரிட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். அதை அதிபர் ஆசாத் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து ராணுவத்தை ஏவி பொதுமக்களை கொன்று குவித்து வருகிறார்.

ராணுவம் நடத்தி வரும் வான்வழி, ஏவுகணை மற்றும் குண்டு வீச்சு தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். உயிர் பிழைத்த பலர் உடல் உறுப்புகள் சிதைந்து ஊனமுற்றவர்களாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.  

70 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிரியாவை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான துருக்கி, லெபனானில் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா.சபை கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

கடந்த நான்காண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் 12 ஆயிரம் குழந்தைகள் உள்பட இரண்டரை லட்சம் பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

அதிபரின் படைகளுக்கு ஆதரவாக ரஷியாவில் இருந்து போர்க்கப்பல்களில் ஏராளமான ஆயுதங்களும், ரஷிய ராணுவ வீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தீவிரவாதத்தை ஒழிக்கும் நோக்கத்தில்தான் சிரியா அரசுக்கு ரஷியா ஆயுதங்களை அளித்து, ஆதரித்துவருவதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கூறியிருந்தார். இதேபோல், அண்டை நாடான ஈரானும் சிரியா அரசுக்கு ஆயுத உதவிகளை செய்து வருகின்றது.

சிரியாவில் ஆசாத் ஆட்சியில் இருக்கும்வரையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வராது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறிஉள்ளார். சிரியாவில் அதிபர் பஷார் ஆசாத் ஆட்சியை முட்டுக் கொடுத்து நிறுத்தவேண்டுமா? அல்லது சட்டப்பூர்வமாக அரசை ஏற்படுத்தி நாட்டை காப்பாற்ற வேண்டுமா? என்பதை ரஷியா மற்றும் ஈரான்தான் முடிவுசெய்ய வேண்டும் என்று ஒபாமா தெரிவித்தார்.

இதையடுத்து, சிரியா அரசியல் வரலாற்றில் திருப்புமுனையாக ஆட்சியாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே சமரச தீர்வை ஏற்படுத்தும் அமெரிக்கா உள்ளிட்ட 15  நாடுகளின் முயற்சிக்கு ரஷியாவும் ஈரானும் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன. அமைதியான முறையில் அங்கு தேர்தல் நடத்தப்பட்டு மக்களின் ஆதரவு கிடைக்காவிட்டால்தான் அதிபர் ஆசாத்தை பதவியில் இருந்து இறக்க வேண்டும். 

இதுதொடர்பாக, அந்நாட்டின் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அன்னிய நாடுகளின் வற்புறுத்தலால் அதிபர் பதவியைவிட்டு ஆசாத் விரட்டப்படுவதற்கு அவர்கள் இடம் கொடுக்க கூடாது. இன்னும் இரண்டாண்டுகளுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு அங்கு உள்நாட்டுப் போர் ஓய்ந்து, அமைதி திரும்ப வேண்டும் என விரும்புவதாகவும், இவ்வகையில், உலக நாடுகள் ஏற்படுத்தும் சமரச தீர்வுக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாகவும் ரஷியாவும், ஈரானும் தற்போது தெரிவித்துள்ளன.

Post a Comment

0 Comments