ராணுவ அமைச்சகம் வரலாற்று முடிவு..!
ஜெர்மன் ராணுவத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து, ஐவேளை தொழுகை உள்ளிட்ட இஸ்லாமிய கடமைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றும் வகையில் மார்க்க அறிஞர்கள் மற்றும் இமாம்களை பணியிலமர்த்த ஜெர்மனி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் ராணுவ அமைச்சர் 'உர்சுலா வான்டெர்லேயன்' கூறுகையில் :
முஸ்லிம் ராணுவ வீரர்களின் பணி மெச்சத்தக்க வகையில் உள்ளதாகவும், குறிப்பாக 'சிரியா' உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் அகதிகளை அணுகுவதில் முஸ்லிம் ராணுவ வீரர்கள், ஜெர்மன் நாட்டின் தூதுவர்களைப் போலவும், செய்தி தொடர்பாளர்கள் போலவும் செயல்படுவதாகவும் 'புகழாரம்' சூட்டினார், ராணுவ அமைச்சர்.
முஸ்லிம் ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு தன்மைகளால் தான் மிகவும் கவரப்பட்டு விட்டதாகவும், இவர்களின் தொழுகை உள்ளிட்ட கடமைகளை குறித்த நேரத்தில் நிறைவேற்றிக் கொள்ள எதுவாக இமாம்களை நியமிப்பது என்று கொள்கையளவில் முடிவெடுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார், அமைச்சர்.
இதுகுறித்த ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை தொடங்கிவிட்டதாக தெரிவித்த பெண் ராணுவ அமைச்சர், தமது இம்முடிவால் ராணுவ வீரர்கள் மட்டுமல்லாது 'ஜெர்மன் முஸ்லிம் கவுன்சில்' தலைவர்களும் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டுள்ளனர் என்றார் 'உர்சுலா வான்டெர்லேயன்'


0 Comments