Subscribe Us

151 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த குஜராத் வைர வியாபாரி

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி மகேஷ் சவானி.

இவர் கடந்த 7 ஆண்டுகளாக தாய், தந்தையை இழந்த இளம் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதை வழக்கத்தில் வைத்துள்ளார்.

கடந்த 2008–ம் ஆண்டு சவானியிடம் வேலை பார்த்த ஒருவர் திடீரென மரணம் அடைந்தார். அவரது 2 மகள்கள் திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்தது. இதனால் அவரது 2 மகள்களும் தவிப்புக்குள்ளானார்கள்.

இதை அறிந்ததும் மகேஷ் சவானியே தந்தை ஸ்தானத்தில் முன் நின்று அவர்களது திருமணத்தை நடத்தி வைத்தார். அன்று முதல் தந்தையை இழந்த இளம் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் சேவையை மகேஷ் சவானி செய்து வருகிறார்.

இந்த ஆண்டு அவர் 151 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இதற்கான பிரமாண்ட விழா கடந்த 3 நாட்களாக சூரத் நகரில் நடந்தது.

சுமார் 1 லட்சம் பேர் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் 3 நாட்களுக்கு சவானி உணவு வழங்கி உபசரித்தது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஜோடிக்கும் மகேஷ் சவானி நகைகள், புத்தாடைகள் கொடுத்து வாழ்த்தினார். அதோடு திருமணமான ஒரு பெண் புகுந்த வீட்டுக்கு செல்லும் போது, கொண்டு செல்ல வேண்டிய சீர்வரிசைப் பொருட்களுக்கான அனைத்து செலவுகளையும் மகேஷ் சவானியே ஏற்றுக் கொண்டார்.

இந்த திருமணத்தை நடத்த சவானி ரூ. 5 கோடி செலவிட்டிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மகேஷ் சவானி கூறுகையில், ‘‘ஒவ்வொரு பெண்ணுக்கும் என் மகள் போல நினைத்து செலவு செய்துள்ளேன். யாராவது மகள் திருமணத்தை நடத்த கணக்கு பார்ப்பார்களா? எனவே நான் எந்த கணக்கும் பார்க்கவில்லை’’ என்றார். 

Post a Comment

0 Comments