ஏதோ ஒரு தருணத்தில், கண்டிப்பாக யாரோ ஓரு குழந்தை உங்களை 'அட...!' என ஆச்சரியப்பட வைத்திருக்கும். அது உங்கள் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆவது இயல்பு.
குழந்தை உங்களை அம்மா, அப்பா என விளித்ததாகவோ அல்லது தவழ்ந்த குழந்தை நடக்க தொடங்கியதோ அல்லது வேறு எதுவாயினும் இருக்கலாம்.
அதே குழந்தைகளிடம் சில சமயங்களில் ஏனோ தானோ என பேசி மாட்டிக் கொண்ட அனுபவங்களும் இருந்திருக்கலாம். அப்படி நான் 'ஙே' என முழித்த சம்பவத்தை பார்ப்போம்.
என்னுடய இரண்டு வயது இளையமகளை தூங்க வைக்கும் முயற்சியில் இருந்தேன் (முயற்சி மட்டுமே). அவளை தூங்க வைக்கிறேன் பேர்வழின்னு நான் மட்டும் பல நாள் தூங்கிய அனுபவங்களும் உண்டு!
பாப்பாவை தட்டி கொடுத்துட்டு இருக்கிறப்போ, திடீர்னு வெளியே பிளைன் போற சத்தம் கேட்டது. இது ஏதுடா 'உள்நாட்டு சதி போல இருக்கே'ன்னு நினைச்சப்போ, வழக்கம் போல "அது என்ன? " அப்படின்னா மகள்.
நான் "ஏரோப்பிளேன்" அப்படின்னு சொல்லி அதோடு விடாமல் கூடவே...., "உனக்கு ஒன்னு வாங்கித் தரட்டுமா?"ன்னு கேட்டேன்.
(ஏங்க, நிலாவ புடிச்சு தரேன்னு சொல்றப்ப, ஏரோப்பிளேன் வாங்கி தரேன்னு சொல்லக் கூடாதாங்க?)
அவ திரும்ப சொன்ன பதில் இருக்கே..... "ஒன்னு வேணாம் அப்பா, இரண்டா வாங்கலாம்!" என வெள்ளந்தியா சொன்னதும் கன்னத்தில் பளார்னு அடிச்சது போல இருந்தது.
அப்புறம் வேற என்ன பேச்சு...... விமானம் கடந்த பின் வெளியே பூரண அமைதி! நான் நிலவின் ஒளியில் முகத்தை தலையணையில் புதைத்தேன்.
-------by ஆரூர் பாஸ்கர்


0 Comments