Subscribe Us

header ads

ராஜித சேனாரத்ன மற்றும் நிஷாங்க சேனாதிபதி , சயூரு சமரசுந்தர இடையில் நடந்ததாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் அடங்கிய இரண்டு இறுவட்டுக்களுடன் - ரன்ஜன் ராமநாயக்க

அவன்ட்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷாங்க சேனாதிபதி, அமைச்சர் ராஜித சேனாரத்னவின் செயலாளரும் வரையறுக்கப்பட்ட அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் தலைவருமான சயூரு சமரசுந்தர இடையில் நடந்ததாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் அடங்கிய இரண்டு இறுவட்டுக்களை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இலஞ்ச ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளார்.

லஞ்சம் கொடுக்க முயற்சித்தமை தொடர்பில் அவன்ட்கார்ட் நிறுவனத்தின் தலைவருக்கு எதிராக முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் லஞ்சப் பணத்தை பெற்றுக்கொண்டமை தொடர்பாக அமைச்சர் ராஜிதவின் செயலாளருக்கு எதிராகவும் முறைப்பாடு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பான செய்திகளை இணையத்தளங்கள் நேற்று வெளியிட்டிருந்தன. அமைச்சர் சார்பில் தான் 5 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொண்டதாக அமைச்சரின் செயலாளர் சயூரு சமரசுந்தர இந்த தொலைபேசி உரையாடலில் கூறியுள்ளார்.

மேற்படி தொலைபேசி உரையாடல் இணையத்தளங்களில் வெளியானதை தொடர்ந்தும் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பேஷ்புக் வலைத்தளத்தில் மற்றுமொரு தொலைபேசி உரையாடல் வெளியிடப்பட்டது.

பணத்தை பெற்றுக்கொள்ள அமைச்சர் மறுத்து விட்டதாக அமைச்சரின் செயலாளர், அவன்ட்கார்ட் நிறுவனத்தின் தலைவரிடம் கூறுவது அதில் உள்ளடங்கியிருந்தது.

இந்த இரண்டு தொலைபேசி உரையாடல்களையும் இலஞ்ச ஆணைக்குழுவிடம் இன்று கையளித்த பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, குற்றச்சாட்டு சம்பந்தமாக இருத்தரப்பினரிடம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

உரையாடல்கள் மூலம் பணம் பரிமாறிக்கொள்ளப்பட்டது உறுதியாகியுள்ளது. எதற்காக இந்த பணம் பரிமாறப்பட்டது என்பது குறித்து விசாரிப்பது அவசியம்.

அமைச்சரின் செயலாளர் இலஞ்ச பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.இதுவும் குற்றம். அவன்ட்கார்ட் நிறுவனம் இலஞ்சம் வழங்க முயற்சித்துள்ளது. இதுவும் குற்றம் எனவும் ரஞ்சன் ராமாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தொலைபேசி உரையாடல்களுக்கு மேலதிகமாக ரஞ்சன் ராமநாயக்க, 5 மில்லியன் ரூபாவுக்கான காசோலை ஒன்றின் பிரதியையும் ஊடகங்களுக்கு வழங்கினார்.

எவ்வாறாயினும் அவன்ட்கார்ட் நிறுவனம் தனக்கு பல சந்தர்ப்பங்களில் இலஞ்சம் வழங்க முயற்சித்தாக அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊடக சந்திப்புகளின் போது கூறியிருந்தார்.

எனினும் இதனை மறுத்த அவன்ட்கார்ட் நிறுவனம் சாட்சியமிருந்தால் முன்வைக்குமாறு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments