கற்பிட்டி பிரதேச சபை உட்பட இலங்கையின் அநேகமான உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டு அதற்கான தேர்தல்கள் இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட இறுதியில் நடைபெறவுள்ளது.
நாம் எதிர்கொள்ளவுள்ள அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்முறை பற்றி நாம் எவ்வாறான தெளிவைப்பெற்றுள்ளோம், எதிர்வரும் தேர்தல் “வட்டார முறையான தேர்தல்” என்பதால் எமது ஆயத்தங்கள் எவ்வாறு இருக்க வேண்டும். என நாம் தெளிவு பெற வேண்டியுள்ளது.
எதிர்வரும் கற்பிட்டி பிரதேச சபை தேர்தலுக்கு நான் நீ என போட்டா போட்டியிட்டுக்கொண்டும், ஒரு சிலர் சிங்கல் டீ அடிக்கும் (கேப்பில்) இடையில் நீ தான் அடுத்த தேர்தலில் போட்டியிடும் நம்பிக்கை நட்சத்திரம் என்றும் எமது ஊர் மக்கள் பேசிகொள்வாதை காணக்கூடியதாகவுள்ளது.
வட்டார முறை தேர்தல் (களப்பு முறை தேர்தல்)
நாம் எதிர்கொள்ள இருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலானது “வட்டார முறை தேர்தல் (Ward System) ” ஆகும். 2012 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க உள்ளுராட்சி மன்ற தேர்தல் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் எல்லை மீள்நிர்ணயம் நடைபெற்று முடிந்திருக்கிறது.இறுதியாக மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணிப்பீட்டின் படி பிரதேச செயலக ரீதியிலும், கிராம சேவகர் பிரிவு ரீதியிலும் அடங்கியுள்ள சனத்தொகையின் இன விகிதாசாரதிற்கு அமைவாகவும் அரசியல் கட்சிகளிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் பெறப்பட்ட ஆலோசனைகளுக்கமைவாகவும் உள்ளுராட்சி மன்ற திருத்தச் சட்டத்தின் கீழ் பிரதேச சபை, நகர சபை, மாநகர சபைகளின் வட்டாரங்கள் பிரிக்கப்பட்டு அதன் எல்லைகளும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
கற்பிட்டி தொடர்க்கம் பூனைபிட்டிய வரை 73 கிலோமீட்டர் நீளமுடைய கற்பிட்டி பிரதேச சபைக்கு 19 உறுப்பினர்களை தெரிவு செய்யும் வண்ணம் 18 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து மேலதிகமாக 6 உறுப்பினர்கள் விகிதாசார முறைப்படி தேர்வு செய்யப்பட்டு மொத்தமாக 25 உறுப்பினர்கள் கற்பிட்டி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.
வேட்பாளர் தெரிவும் கட்டுப்பணம் செலுத்தலும்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சி அல்லது சுயேச்சை குழுக்கள் வேட்பாளர்களாகப் போட்டியிடும் ஆட்கள் குழு எதுவும சுயேச்சை குழுக்கள் ஏதேனும் உள்ளுர் அதிகாரசபையின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் நோக்கத்திற்கு அத்தகைய உள்ளூராட்சி அதிகாரசபையின் எல்லா வட்டாரங்களிலும் போட்டியிடுதல் தொடர்பாக வெளிப்படுத்தல் வேண்டும்.
இதன் போது இரண்டு வகை வேட்பாளர் தேர்வு பத்திரம் (Nomination Sheet) அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சியின் செயலாளரால் அல்லது அவரின் முகவரால் சுயேச்சை குழுக்கள் அதன் தலைவரால் மாவட்ட தேர்தல்கள் அதிகாரிக்கு கையளிக்க வேண்டும்.
முதலாவது வேட்பாளர் தேர்வு பத்திரத்தில்; உள்ளூராட்சி அதிகாரசபையின் வட்டாரம் ஒவ்வொன்று தொடர்பிலும்/ பல் உருப்பினர் வட்டாரங்கள் தொடர்பிலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கைக்குச் சமமாக அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சை குழுக்களோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய வேட்பாளர்/ வேட்பாளர்களினதும் பெயர்களை வெளிபடுத்தல் வேண்டும்.
கற்பிட்டி பிரதேச சபையை பொறுத்தவரை ஒரு அரசியல் கட்சியோ சுயேச்சை குழுக்களோ முதல் பத்திரத்தில் தேர்ந்தடுக்கப்பட வேண்டிய 19 உறுப்பினர்களின் பெயர்களை எந்த வட்டாரத்தில் யார் தேர்தெடுக்கப்பட வேண்டும் என வட்டாரத்தின் பெயருக்கு எதிராக வேட்பாளரின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும். பல உறுப்பினர்களை தேர்வு செய்யும் வட்டாரமாக நுரைச்சோலை வட்டாரம் உள்ளது இங்கு தெரிவாகும் முதல் நபரின் பெயருடன் அடுத்து தெரிவாகும் இரண்டாவது நபரின் பெயரையும் தெளிவாக வெளிபடுத்தல் வேண்டும்.
இரண்டாவது வேட்பாளர் தேர்வு பத்திரத்தில்; உள்ளூராட்சி அதிகார சபைக்காக வட்டார முறையில் தேர்வு செய்யப்படும் உருப்பினர்கள் தொகையில் 30% எத்தனை உறுப்புனர்கள் என கணித்து அதற்கு சமமான எண்ணிக்கையை மேலதிக வேட்பாளர்களாக பெயர் விபரம் வழங்கப்பட வேண்டும்.
கற்பிட்டி பிரதேச சபையை பொறுத்தவரை வட்டார முறையில் தேர்வு செய்ய வேண்டிய மொத்த உறுப்பினர்கள் தொகை 19 ஆகும். 19தில் 30% 5.7 என வரும் போது 5 உறுப்பினர்கள் என மட்டுபடுத்தப்படும். இங்கு முதல் பத்திரத்தில் குறிப்பிட்ட நபர் போக மேலதிகமாக 6 வேட்பாளர்களினது பெயர்களை ஒரு அரசியல் கட்சியோ சுயேச்சை குழுக்களோ மேலதிக வேட்பாளர்களாக வெளிப்படுத்தல் வேண்டும். மேலதிக ஆட்களினதும் மொத்த எண்ணிக்கையின் 25% பெண்களையும் இளைஞர்களையும் கொண்டிருக்கலாம்.
குறித்த உள்ளூராட்சி அதிகாரசபையொன்றின் தேர்தல் இடப்பரப்பின் ஏதேனும் வட்டாரத்திற்கு தேர்தலுக்கான வேட்பாளர் ஒருவராக ஒருவர் நியமிக்கப்படலாம். ஆயினும் ஒரு வேட்பாளர் ஓர் உள்ளூராட்சி அதிகார சபையின் இடப்பரப்பின் ஒன்றுக்கு மேற்பட்ட வட்டாரத்தில் வேட்பாளர் ஒருவராக நியமிக்க முடியாது.
அரசியல் கட்சியொன்றின் வேட்பாளர் ஒருவருக்கு கட்டுப்பணமாக 5,000(ஐயாயிரம்) ரூபாவும் சுயேச்சை குழுவின் வேட்பாளர் ஒருவருக்கு கட்டுப்பணமாக 20,000 இருபதாயிரம் ரூபாவும் செலுத்தப்பட வேண்டும்.
வெற்றிபெற்ற உருப்புனர்கள் அறிவித்தல்…
ஒவ்வொரு வாக்கெடுப்பு நிலையத்திலும் வாக்குகளை எண்ணுதலானது, அத்தகைய ஒவ்வொரு வாக்கெடுப்பு நிலையத்திலும் இடம்பெறுதல் வேண்டும்.
அரசியல் கட்சியொன்றின் அல்லது சுயேச்சை குழுவின் இரு வாக்கெண்ணும் முகவர்களை ஒவ்வொரு வாக்கெடுப்பு நிலையத்திலும் வாக்குகளை எண்ணும போது அனுப்பி வைக்க முடியும். வாக்குகள் எண்ணப்படும் நேரத்தில், வேட்பாளரொருவர், ஒரு வாக்கெண்ணும் முகவராக மட்டுமே வாக்கெடுப்பு நிலையத்தில் இருக்கலாம்.
ஆகக் கூடிய எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சியை அல்லது சுயேச்சைக் குழுவைச் சேர்ந்தவரும் அந்த வட்டாரத்திற்கு அதன் வேட்பாளராக அதன் நியமனப்பத்திரத்தில் அத்தகைய அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சியால் அல்லது சுயேச்சைக் குழுவால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டவருமான வேட்பாளரின் பெயரை, அவ்வட்டாரத்துக்கான உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவராக அறிவிக்கப்படும்.
இதனடிப்படையில் கற்பிட்டி பிரதேச சபை தேர்தலின் போது கற்பிட்டியிலுள்ள 3 வட்டாரங்களில் 3 உறுப்பினர்கள் மாத்திரமே தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆணைவாசல் வட்டாரம், கற்பிட்டி வட்டாரம், மண்டலக்குடா வட்டாரம் என கற்பிட்டியிலுள்ள 8 கிராம சேவகர் பிரிவும் பிரிக்கப்பட்டுள்ளது. ஆணைவாசல் வட்டாரமானது பள்ளியாத்தை (633A), டட்ச்பே (633), ஆணைவாசல் (631A) ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாகவும், கற்பிட்டி வட்டாரமானது புதுக்குடியிருப்பு (630), பெரியகுடியிருப்பு (630A) ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாகவும், மண்டலக்குடா வட்டாரமானது சின்னகுடியிருப்பு(631) , வண்நிமுந்தால் (630B) , மண்டலக்குடா (630C) என கற்பிட்டிகுள் வட்டாரங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. ( மக்கள் செறிவினை அடிப்படையாக வைத்து வட்டாரங்களை அதிகரிப்பதற்காக உரிய அமைச்சுக்கு முறைப்பாடு ஒன்று செய்யப்படுள்ளது)
விகிதாசார முறையில் தெரிவு செய்யப்படவுள்ள 30% அல்லது குறைவான உறுப்பினர்கள்.
B
-------- X 100 = D
A+B
A = வட்டாரங்களில் வெற்றிபெறும் அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சை குழுக்கள் பெறும் மொத்த வாக்குகள்.
B = வட்டாரங்களில் போட்டியிட்டு தோல்வியடையும் அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சை குழுக்கள் பெறும் மொத்த வாக்குகள். அளிக்கபட்டட் மொத்த வாக்குளில் 5% அதிகமாதாக அனைத்து அணிகளின் மொத்தம்.
D = ஆசனங்களைத் தீர்மானிக்கும் விகிதம்
** D யானது 30% விட அதிகமானால், ஆசனங்களைத் தீர்மானிக்கும் விகிதம் வட்டாரங்களில் தேர்வான மொத்த உறுப்பினர்களில் 30% மான உறுப்பினர்கள் விகிதாசார முறையில் தேர்வு செய்யப்படும்.
** D யானது 30% விட குறைவானால், ஆசனங்களைத் தீர்மானிக்கும் விகிதம் வட்டாரங்களில் தேர்வான மொத்த உறுப்பினர்களில் D% மான உறுப்பினர்கள் விகிதாசார முறையில் தேர்வு செய்யப்படும்.
** விகிதாசார முறையில் தேர்வான உறுப்பினர்கள் (X) என இங்கு கருதினால்...
கட்சிகளுக்கு ஆசனங்களைப் பகிர்ந்தளிக்கும் முறை
X = விகிதாசார முறையில் தேர்வான உறுப்பினர்கள் எண்ணிக்கை
Q = தகுதியாகும் எண்ணிக்கை
B
Q= -------
X
வட்டாரங்களில் போட்டியிட்டு தோல்வியடையும் அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சை குழுக்கள் பெறும் மொத்த வாக்குகளையும் Q வினால் வகுத்து அதனடிப்படையில் ஆசனங்கள் பகிர்ந்தளிக்கப்படும்.
விகிதாசார முறையில் கட்சிகள் பெற்ற அடிப்படையில் உறுப்பினர் தெரிவு அரசியற் கட்சியோ அல்லது சுயேச்சை குழுவோ தீர்மானித்துக்கொள்ளும். அரசியற் கட்சியை பொறுத்தவரை அதன் செயலாளர் அல்லது செயலாளரால் நியமிக்கப்படும் முகவரால், சுயேச்சை குழுவை பொறுத்தவரை அதன் தலைவரால் வட்டாரங்களில் போட்டியிட்ட மேலதிக உறுப்பினர்கள் பெயர் பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்படும்.
உள்ளூராட்சி அதிகாரசபையின் தலைவர் தெரிவு
இந்த தேர்தல் முறையில் உள்ளூராட்சி அதிகாரசபையின் தலைவர் தெரிவானது 50% அதிகமான ஆசனங்களைப் பெற்று வெற்றி பெறும் அரசியற் கட்சியோ அல்லது சுயேச்சை குழுவோ தீர்மானித்துக்கொள்ளும். அரசியற் கட்சியை பொறுத்தவரை அதன் செயலாளர் அல்லது செயலாளரால் நியமிக்கப்படும் முகவரால் வெற்றிபெறும் உள்ளூராட்சி அதிகாரசபையின் தலைவர் தீர்மானிக்கப்படும். சுயேச்சை குழுவை பொறுத்தவரை அதன் தலைவரால் உள்ளூராட்சி அதிகாரசபையின் தலைவர் தீர்மானிக்கப்படும்.
Wart Map: Puluthiwayal SLMC
-Samsham Shafeek-


0 Comments