Subscribe Us

அம்பாறை மாவடத்தில் (முஸ்லிம் அரசியலின் தாயகம்) முஸ்லிம் குழுக்கள் பிரிந்து செயற்படுவதானால் நிலைமை கவலைக்கிடமாக இருக்கின்றது.



அம்பாறை மாவடத்தில் (முஸ்லிம் அரசியலின் தாயகம்) முஸ்லிம் குழுக்கள் பிரிந்து செயற்படுவதானால் நிலைமை கவலைக்கிடமாக இருக்கின்றது.

மக்கள் காங்கிரஸின் பிரவேசம் முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்தினால் ஐக்கிய தேசியக் கட்சியில் முதல் மூவரும் பெரும்பான்மை இனத்தவராக இருப்பர். மக்கள் காங்கிரஸும், முஸ்லிம் காங்கிரஸும் ,தேசிய காங்கிரஸும் குறிப்பாக அதன் தலைவர்களும் முஸ்லிம் அரசியலின் தாயகத்தை சந்தி சிரிக்கும் நிலைக்கு தள்ளி விடுவர்.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியிற்கு ஐக்கிய தேசியக் கட்சியூடாக அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் மூவரை (தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால்) அனுப்புவதே சமயோசிதமான நகர்வாக, சாணக்கியமான முடிவாக இருக்கும்.

போராட்டமாய் ஆரம்பித்த நமது தனித்துவ அரசியல் குபேரர்களின் சூதட்டமாய் மாறி இன்று பிளவுண்டு சிதறிச் சின்னா பின்னப் பட்டு முதலாளித்துவ முகாம்களில் சரணாகதி நிலையை அடைந்துள்ளது, பேரம் பேசும் அரசியல் சோரம் பேசும் அரசியலாய் அசிங்கப்பட்டு கிடக்கிறது.

தலைமைத்துவத்தை இழந்து தவிக்கும் ஒரு சமூகம் வேறு வழியேதுமின்றி இப்போதைக்கு குறைந்த பட்ச தீமைகளை தெரிவு செய்கின்ற சாமர்த்தியம் பற்றியே சிந்திக்கின்றது.

புத்தளத்தில் PPAF ஒட்டக அணியூடாக ஒரு பிரதிநிதியை உறுதிப்படுத்திக் கொள்ளும் சாத்தியம் இருப்பதனால் அவர்களில் ஒருவர் தெரிவாவதனையும், PPAF இனது ஷூராவின் முழுமையான கட்டுப் பாட்டில் இருப்பதனையும், நல்லாட்சி தேசிய அரசுடன் இணைவதனையும் விரும்புகின்றேன்.
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக அதன் கூட்டுக் கட்சிகளில் போட்டியிடுவோரில்

அடுத்த பாராளுமன்றத்தில் இருக்க வேண்டுமென்று நான் விரும்புகின்ற நானறிந்த புதிய முகங்கள் :

கொழும்பில்: சகோதரர் முஜீபுர் ரஹ்மான் (UNP) 
திருமலை: வைத்தியர் ஸாஹிர் (UNP )
மட்டக்களப்பில்: பொறியியலாளர் அப்துல் ரஹ்மான், (SLMC)
கம்பஹா : ஷாபி ரஹீம் (UNP) 
வன்னி : சகோ. எஸ்.எஸ்.எம் நியாஸ் - (SLMC)
குருணாகல் : வைத்தியர் ஷாஃபி (UNP)

அடுத்த அணிகளில் கேட்போர் மற்றும் பழைய முகங்களில் நானறிந்த சிலரும் இருக்கின்றார்கள்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் புரிந்துணர்வு தேர்தலுக்குப் பின்னரும் நல்லாட்சி கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில் நீடிக்க வேண்டும், பலம் பெறல் வேண்டும் இன்ஷா அல்லாஹ்.

சிங்கள தமிழ் பெரும்பான்மை சமூகங்களுக்கு மத்தியில் வாழும் முஸ்லிம் மக்கள் மாவட்ட ரீதயில் தமது விருப்பு வாக்கை தமது சமூகம் சார்ந்த ஒருவருக்கு அல்லது இருவருக்கு வழங்கினாலும் தத்தமது தேர்தல் தொகுதியில் தாம் சார்ந்த கட்சியில் இருக்கும் பிரதான அமைப்பாளர் அல்லது வேட்பாளர்களுக்கும் தமது ஆதரவையும் விருப்பு வாக்கில் ஒன்றையும் வழங்குவதற்கான தெளிவான நிலைப்பாடுகளை எடுத்து அவர்களுடன் தேர்தல் பணிகளில் இணைந்து ஈடுபடல் வேண்டும்.

-Inamullah Masihudeen-

Post a Comment

0 Comments