பிரிட்டனின் ஜி.க்யு. பத்திரிகையால், இங்கிலாந்தின் 49-வது சிறந்த உடையணியும் ஆணாக இளவரசர் ஜார்ஜ் (வயது 2) சமீபத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அணிந்த உடைகளும், ஷூக்களும் உலகின் பல மூலைகளிலும் டிரெண்ட் ஆகியுள்ளது.
இதைத்தொடர்ந்து, ராஜ வம்சத்தில் பிறக்காத, மேக்ஸ் க்னோப்லாச்(23) என்கிற பத்திரிகையாளர், தானும் இளவரசராக இருந்தால் எப்படி இருக்கும்? என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் இளவரசர் ஜார்ஜ் போல ஒரு வாரத்துக்கு உடையணிந்து நியூயார்க் நகர சாலைகளில் மக்களுக்கு காட்சியளித்தார்.
முதல் நாளன்று இளவரசர் ஜார்ஜின் தங்கை பிறந்தபோது அவர் அணிந்திருந்த நீல ஸ்வெட்டரை அணிந்து, 91 டிகிரி வெயிலில் நின்றிருந்தவரை, அந்த வழியே சென்றவர் ‘சூடாக இல்லை?’ எனக் கேட்டுச் சென்றாராம். இளவரசர் ஜார்ஜ் அணிந்திருந்த உடைகளைப் போல ஆண்களுக்கு உடைகள் கிடைப்பது கொஞ்சம் கடினமாக இருந்தது என்றும், அதனால் தானே ஸ்வெட்டர் சிலவற்றை நெய்து ஓரளவுக்கு அவரைப் போலவே தோன்ற முயற்சித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
விளையாட்டாக அவர் செய்த இந்த லீலையை நியூயார்க் நகர பரபரப்பில் மக்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லையாம். எனினும், இளவரசனைப் போல எல்லோரும் வாழ முயற்சித்துப் பார்க்க வேண்டும், இது ஜாலியாகத்தான் இருக்கிறது, என்றார்.
அவர் அணிந்த உடைகளுடன் வேலை முதற்கொண்டு எல்லா இடங்களுக்கும் சென்று ஒரு வீடியோ தொகுப்பையும் உருவாக்கியுள்ளார் மேக்ஸ். இந்த காமெடி வீடியோவைக் கண்டு நீங்களும் ராஜாவைப் போல உணருங்கள்!
0 Comments