நாட்டின் அனைத்து வளங்களை பகிர்ந்துகொண்டு ஒற்றையாட்சிக்குள் மூவின இனத்தவர்களும் வாழ்வதற்கான வழிவகைகளை புதிய அரசாங்கம் செய்யவேண்டும் என நீதியான சமூகத்திற்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் கோரிக்கை விடுத்தார்.
மேலும் நாட்டை வழிநடத்தக் கூடிய பரிசுத்தமான பாராளுமன்றம் உருவாக்கப்பட வேண்டும். இதன்பிரகாரம் தேர்தலில் ஒழுக்கமானவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் வேண்டினார்.
பிட்டகோட்டேயிலுள்ள சோலிஸ் ஹோட் டலில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டிற்கு உகந்த சட்டத்தை உருவாக்கும் மன்றமான பாராளுமன்றத்திற்கு ஊழல் மோசடிகளுடனும் போதைப்பொருள் வர்த்தகத்துடனும் தொடர்புடையோரே முன்பு அதனைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். இதன் காரணமாக இலங்கை பாரியளவில் பின்னடைவை எதிர்கொண்டது மாத்திரமின்றி போதைப்பொருள் வர்த்தகத்தின் கேந்திர நிலையமாகவும் மாறியது.
எனவே, இந்த நிலைமையை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும். பாரிய மாற்றமொன்றை நாட்டில் ஏற்படுத்த வேண்டியுள்ளது. புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது. பரிசுத்தமான பாராளுமன்றத்தை உருவாக்க வேண்டும்.
அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த மஹிந்த சிந்தனையின் பிரகாரம் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முனையவில்லை. மக்களை ஏமாற்றுவதிலேயே குறியாக இருந்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முழுமையாக ஒழித்துக் கட்டுவதாக கூறினார். 17 ஆவது திருத்தத்தை பலப்படுத்துவதாகவும் கூறினார். எனினும் ஒன்றையேனும் நிறைவேற்றவில்லை.
இதன்காரணமாகவே நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்தி வெற்றி பெற்றோம். எனினும் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறவில்லை. மாறாக நாமே வெற்றிபெற்றோம்.
இருந்தபோதிலும் 100 நாள் வேலைத்திட்டத்தில் நாம் முன்வைத்த எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. அதற்கு பெருமளவில் இடையூறு விளைவிக்கப்பட்டது. எனினும் புதிய பாராளுமன்றத்தில் இந்த மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.
எனவே நாட்டில் உருவாகும் புதிய அரசாங்கம் அதன் அனைத்து வளங்களை பகிர்ந்துகொண்டு ஒற்றையாட்சிக்குள் மூவின இனத்தவர்களும் வாழ்வதற்கான வழி வகைகளை செய்யவேண்டும்.
மேலும் நாட்டை வழிநடத்தக் கூடிய பரிசுத்தமான பாராளுமன்றம் உருவாக் கப்பட வேண்டும். இதன்பிரகாரம் தேர்த லில் ஒழுக்கமானவர்களை பாராளுமன்றத் திற்கு அனுப்ப வேண்டும் என்றார்.

0 Comments