Subscribe Us

பறையின் இசையில் மனதை பறிகொடுத்த வெளிநாட்டு மாணவர்கள்...


லண்டன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவம் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த 6 மாணவர்கள் மற்றும் 2 பேராசிரியர்கள் கோவை வந்தனர்.

அவர்கள் தமிழ்நாட்டில் வாழும் இலங்கை அகதிகளின் வாழ்க்கைத்தரம், குடிசைவாழ் மக்கள் மற்றும் அரசு பள்ளிகளின் தரம் குறித்து மதிப்பீடு செய்ய வந்தனர். இலங்கை அகதிகளை சந்திக்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே வறுமைகோட்டுக்கு கீழ் வாழும் குடிசை வாழ் மக்களின் வாழ்க்கை தரம் பற்றி குறிப்பெடுத்தனர். அதன்பின்னர் பள்ளிக்குழந்தைகளின் தரம் மற்றும் பயிற்றுவிக்கும் முறைகுறித்தும் அறிந்தனர்.

கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய இல்லத்துக்கும் வெளிநாட்டு மாணவர்கள் சென்றனர். இல்ல நிர்வாகி பிரபாகரன் பறை இசை கருவியை இசைக்க மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். இதனைப்பார்த்த வெளிநாட்டு மாணவர்கள் பறையின் இசையில் மனதை பறிகொடுத்தனர். மறுநிமிடமே தாங்களும் பறை இசைக்கருவியை இசைக்க கற்றுக்கொள்ள முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து பயிற்றுனர் பிரபாகரனிடம் பறை இசை எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பறை இசையை முறைப்படி கற்றுக்கொள்ள எவ்வளவு பவுண்டு வேண்டுமானாலும் பரவாயில்லை எங்களுக்கும் கற்றுக்கொடுங்கள் என்றனர். பணம் ஏதும் வேண்டாம் இலவசமாகவே கற்றுத்தருகிறேன் என்று கூறி கற்றுத்தந்தார்.

ஆர்வமாக கற்றுக்கொண்ட லண்டன் மாணவர்கள் இது குறித்து கூறும்போது,

பறை இசை உலகின் முதல் இசை என்பதை கூறகேட்டிருக்கிறோம். ஆனால் இப்போது தான் அதனை அனுபவிக்கிறோம். பறை இசையை எங்கள் நாட்டிலும் பரப்ப விரும்புகிறோம். ஏனெனில் இந்த இசை நாடி, நரம்புகளை முறுக்கேற்றுகிறதுஎன்றனர்.

அதை தொடர்ந்து கோலாட்டத்தையும் மாணவர்கள் கற்றுக்கொண்டனர். கோலாட்டடம் குறித்து மாணவர்கள் கூறும்போது இது போர்முறையை போன்று உள்ளது. ஒரு கையில் கத்தியும் மறுகையில் கேடயமும் வைத்துள்ளது போன்று உள்ளது. அடுத்தடுத்த அடி வைக்கும்போது நினைவுக்கு நன்கு பயிற்சி அளிப்பது போல் உள்ளது. இது தவிர உடலுக்கும், மனதிற்கும் உற்சாகத்தை தருகிறது என்றனர்.


Post a Comment

0 Comments