ஏழை மக்களின் பசியைப் போக்க அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியை சேர்ந்த 88 வயது முதியவர் கடந்த 33 ஆண்டுகளாக நடந்து, 2 லட்சம் டாலர் நிதி திரட்டியுள்ளார்.
இங்குள்ள வடக்கு கரோலினா பகுதியை சேர்ந்த லேன்கஸ்டர், பிரபல அமெரிக்க நிறுவனமான ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனியில் என்ஜினீயராக வேலைசெய்து கடந்த 1990-ம் ஆண்டு பணி ஓய்வுபெற்றார்.
ஏழை மக்களின் பசியைப் போக்கும் முயற்சிக்கு நிதி திரட்டுவதற்காக கரோலினாவில் கொளுத்தும் வெயில், கொட்டும் மழை போன்றவற்றை பொருட்படுத்தாமல் ஆண்டுதோறும் 3.6 மைல் தூரம் கொண்ட மலைப்பாதையில் நடைப்பயண நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
பணிஓய்வு பெற்ற பின்னரும், இதயம் சார்ந்த சிகிச்சைகளுக்கு பின்பும் இந்த நடைப்பயண நிகழ்ச்சியில் ஆண்டுதோறும் தவறாமல் பங்கேற்றுவரும் லேன்கஸ்டர், இந்த பொதுச்சேவையின் மூலம் இதுவரை 2 லட்சத்து 18 ஆயிரம் அமெரிக்க டாலர்களை நிதியாக திரட்டியுள்ளார்.
இந்த நிதியின் மூலம் தனது பகுதியில் வசிக்கும் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு அன்றாடம் உணவளிக்கும் ஒரு தொண்டு நிறுவனத்தில் தனது மனைவியுடன் சேர்ந்து இவர் தன்னார்வலராகவும் தொண்டாற்றி வருகிறார்.
வரும் அக்டோபர் மாதம் 18-ம் தேதி தனது 89-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ள லேன்கஸ்டர், இன்னும் நூறாண்டுகள் வாழ்ந்து பல ஏழை மக்களின் பசியை தீர்க்கும் நடைப்பயணத்தை தொடர வாழ்த்துவோம்!


0 Comments