Subscribe Us

முஸ்லிம்கள் கடும்போக்கு சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு இரையாகக் கூடாது: மசூர் மௌலானா

-Mashoor Moulana-


இன்று முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டி அதன் மூலம் குளிர்காய சில தீய சக்திகள் முயற்சிக்கின்றன. அவ்வாறான சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது. இதற்கு முஸ்லிம்கள் துணைபோகாது மிகவும் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் என  முஸ்லிம் சிங்கள தேசிய ஒருமைப்பாடு தொடர்பான வேலைத்திட்டத்தின் தலைவரும் சமூக சிந்தனையாளருமான அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா 'விடிவெள்ளி'க்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

அவரது நேர்காணலின் முழு விபரம் வருமாறு:

Q: கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்டீர்கள். இம் முறை ஏன் போட்டியிடவில்லை?

காலத்தின் தேவை கருதியே நான் இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை. பல கட்சிகளிடமிருந்தும் அரசியல் தலைவர்களிடமிருந்தும் எனக்கு தேர்தலில் போட்டியிடுமாறு அழைப்பு வந்தது. கிழக்கு மாகாணத்தில் போட்டியிடுமாறும் சிலர் என்னை வேண்டினார்கள். ஆனாலும் நான் மறுத்துவிட்டேன்.
நான் முஸ்லிம்களின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கின்றவனாக அடையாளப்படுத்தப்படுவதால் தேர்தலில் போட்டியிட்டால் அதன் மூலம் ஏதேனும் தவறான புரிதல்கள் ஏற்பட்டு விடுமோ என  அஞ்சினேன்.  முஸ்லிம்களுக்கும் பெரும்பான்மை சமூகத்திற்குமிடையே கடந்த காலங்களில் குறிப்பாக களுத்துறை மாவட்டத்தில் சில கசப்பான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படக் கூடாது என்பதே எனது அவா. அதன் ஒரு கட்டமே நான் தேர்தலில் போட்டியிடாது தவிர்த்துக் கொண்டது.

Q: இந்தத் தேர்தலில் போட்டியிடும் பிரதான தரப்புகள் பற்றிய உங்கள் பார்வை எப்படியிருக்கிறது?

இந்தத் தேர்தலில் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட கடும்போக்கு சக்திகள் போட்டியிடுகின்றன. அதுவும் அவர்கள் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடுகிறார்கள். அளுத்கம கலவரத்துக்கு வித்திட்ட இவர்கள் ஏன் அதே மாவட்டத்துக்கு வந்து போட்டியிடுகிறார்கள் என்ற கேள்வி இங்கு எழுகிறது. 
எனவேதான் இந்த இடத்தில் முஸ்லிம்கள் மிகவும் ஒற்றுமையாக செயற்பட வேண்டியது அவசியமாகும். முஸ்லிம்கள் தங்களுக்குள் பிளவுபடுவது இவ்வாறான சக்திகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என நான் கருதுகிறேன்.

முஸ்லிம் வேட்பாளர்கள் தமது எதிர்கால வேலைத்திட்டங்களை மக்கள் முன் வைத்து பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும். தனது அடுத்த 5 வருட கால திட்டம் என்ன? அதற்கு எங்கிருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்ளப் போகிறேன்? எந்த நாட்டின் உதவிகளைக் கொண்டு வந்து மக்களுக்கு சேவை செய்யப் போகிறேன்? என்ற கேள்விகளுக்கு பதிலளிப்பவராக அவர் இருக்க வேண்டும்.

மாறாக அடுத்த வேட்பாளரான முஸ்லிம் சகோதரனின் மானத்தில் கைவைக்கின்ற, அவனது தனிப்பட்ட வாழ்வை சந்திக்கு இழுக்கின்ற காரியங்களை செய்வதைவிட்டும் தவிர்த்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

Q:அடுத்த பாராளுமன்றத்திற்கு தெரிவாகவுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளின் பணி எவ்வாறு அமைய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

முஸ்லிம் சமூகத்திற்கு ஏதேனும் பிரச்சினைகள் வரும்போது அல்லது அடுத்த இனத்தவர்களால் அச்சுறுத்தல்கள் வரும்போதுதான் மக்கள் பிரதிநிதிகள் ஓடிவந்து குரல் கொடுக்கவோ அல்லது சேவை செய்யவோ முனைகிறார்கள். அந்தப் பிரச்சினைகள் முடிவுற்றதும் அவர்கள் மக்களிடமிருந்து ஒதுங்கிவிடுகிறார்கள். இந் நிலை மாற வேண்டும். 

முஸ்லிம் சமூகத்தின் கல்வி,தொழில்வாய்ப்பு, பொருளாதாரம் , அபிவிருத்தி என சகல விடயங்கள் தொடர்பிலும் தொடர்ச்சியாக அக்கறை காட்டுபவராக அவர் விளங்க வேண்டும். உதாரணமாக இன்று ஒரு அரசியல்வாதி ஒரு பாடசாலைக்கு அழகிய கட்டிடம் ஒன்றைக் கட்டிக் கொடுத்துவிட்டு அதனைத் திறந்து வைப்பதோடு மாத்திரம் தனது பணி முடிந்துவிட்டதாக கருதுகிறார். அதன் பிற்பாடு அந்தக் கட்டிடத்தில் கற்பதற்கு மாணவர்கள் இருக்கிறார்களா? அந்தக் கட்டிடத்திற்கு தேவையான தளபாடங்கள் உள்ளனவா? கற்பிப்பதற்கு போதுமான ஆசிரியர்கள் இருக்கிறார்களா? பாடத்திட்டம் ஒழுங்கான முறையில் உள்ளதா? பரீட்சைகளில் அப் பாடசாலை நல்ல பெறுபேற்றைப் பெறுகிறதா? என்றெல்லாம் பின்தொடர்ந்து கவனம் செலுத்துவதில்லை. 

Q: 20 ஆவது திருத்தம் தொடர்பில் நீங்கள் காட்டமான விமர்சனங்களை அண்மையில் ஊடகங்கள் வாயிலாக முன்வைத்திருந்தீர்கள். இப்போது பழைய முறையிலேயே தேர்தல் நடக்கிறது. இது பற்றி?

20 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டால் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் முன்னரை விடக் குறையும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.  எனவேதான் இந்தப் பொதுத் தேர்தல் முஸ்லிம்களைப் பொறுத்தவரை சிறந்ததொரு வாய்ப்பாகும். இதனை நாம் நன்கு பயன்படுத்தி எமது பிரதிநிதித்துவத்தைத் தக்க வைத்துக் கொள்ள முன்வர வேண்டும். 

அல்லாஹ்வின் உதவியால் 19 ஆவது திருத்தம் மாத்திரமே நிறைவேற்றப்பட்டது. 20 ஐ நிறைவேற்றும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் அதற்கு முன்னராகவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது. இது சிறுபான்மையினருக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டும்.

எனவே இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை முஸ்லிம்களின் குறிக்கோள் அதிகமான பிரதிநிதிகளை எவ்வாறு பெற்றுக் கொள்ள முடியும் என்பதாகவே அமைய வேண்டும்.

ரவூப் ஹக்கீம் ,ரிஷாத் பதியுதீன், அதாவுல்லாஹ் என தமக்கிடையில் கருத்து முரண்பாடு கொண்டவர்கள் பல்வேறு கட்சிகளிலும் போட்டியிட்டாலும்  இவர்கள் மூலமாக எவ்வாறு கூடியளவு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தக்க வைக்கலாம் என்பது பற்றியே சகல முஸ்லிம்களும் சிந்திக்க வேண்டும். அதனடிப்படையிலேயே வாக்குகளையும் அளிக்க வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் இவர்கள் எல்லோரும் எதிர்காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்று 'முஸ்லிம் கூட்டணி'யாக செயற்பட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

Q: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இந்தத் தேர்தலிலும் களமிறங்கியிருக்கிறார். கடந்த தேர்தலில் அவரைத் தோல்வியடையச் செய்வதில் முஸ்லிம்கள் கணிசமாக பங்களிப்பை வழங்கியிருந்தார்கள். இம் முறை அவருக்கு குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் ஆதரவளிப்பார்கள் என்று கருதுகிறீர்களா?

கடந்த முறை மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை. மாறாக மஹிந்தவுக்கு எதிராகவே வாக்களித்தார்கள். அதனால்தான் மைத்திரி வெற்றி பெற்றார்.

முஸ்லிம்கள் மஹிந்தவை எதிர்த்தமைக்கு பிரதான காரணம் அவர் தர்கா நகர், அளுத்கம கலவரத்தை சரியான முறையில் கையாளவில்லை என்பதேயாகும். அதனை பிரதான குற்றச்சாட்டாக வைத்தே முஸ்லிம் மக்கள் மத்தியில் மஹிந்தவுக்கு எதிரான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. இது 99 வீதமான முஸ்லிம்கள் அவரை வெறுக்கின்ற நிலையை ஏற்படுத்தியது.

ஆனால் எந்த அளுத்கம விவகாரத்தையும் தர்கா நகர் விவகாரத்தையும் பிரசாரப் பொருளாக்கி ஆட்சிக்கு வந்தார்களோ அவர்கள் தமது கடந்த 6 மாத ஆட்சிக் காலத்தில் அது பற்றி ஒருவார்த்தை கூட பேசவில்லை. தர்கா நகர் பிரச்சினையை இவர்கள் கறிவேப்பிலையாக பயன்படுத்தினார்கள் என்று கூட சொல்லலாம்.
அந்த கலவரத்துக்கு காரணமாக கடும்போக்குவாதிகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளையும் புதிய அரசாங்கம் எடுக்கவில்லை. அவர்கள் இந்த ஆட்சியில் மிக சுதந்திரமாக நடமாடுகிறார்கள். 
அதே இனவாத கருத்துக்களை இன்றும் பகிரங்கமாகப் பேசுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் அரசியலில் கால்பதிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அரசியல்வாதிகளை கைது செய்யும் இந்த அரசாங்கம் அவர்களை மீண்டும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கிறது. ஆனால் இந்த கடும்போக்கு பிக்குகளை மாத்திரம் உடனடியாக விடுவிக்கிறது. அப்படியானால் இந்த அரசாங்கத்திலும் அவர்களுக்கு மறைமுக உதவிகள் அங்கீகாரங்கள் வழங்கப்படுகின்றதா எனும் சந்தேகம் நமக்கு எழுகிறது.

இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பதன் மூலம் எதிர்காலத்திலும் ஏதேனும் பிரச்சினைகளை உருவாக்க இந்த அரசாங்கம் விரும்புகிறதா? எனக் கேட்க விரும்புகிறேன்.

அளுத்கமவையும் தர்கா நகரையும் அழித்து நாசப்படுத்தியவர்களுக்கு இன்று தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி எவருமே வாய் திறக்கவில்லை. ஆட்சேபனை தெரிவிக்கவுமில்லை. அதிலும் குறிப்பாக அவர்கள் வன்முறைகளைத் தூண்டிவிட்ட அதே களுத்துறை மாவட்டத்தில்தான் போட்டியிடுகிறார்கள்.

போதைப் பொருள் வியாபாரிகளுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்படவில்லை. நல்ல விடயம். வரவேற்கிறோம். ஆனால் அதைவிடவும் மோசமான ஒரு இனத்தையே அழித்துவிட முனைந்த முனைந்து கொண்டிருக்கின்ற கடும்போக்குவாதிகள் தேர்தலில் போட்டியிட இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது பெரும் சந்தேகத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

மஹிந்தவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்றே நாம் நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டுவர வாக்களித்தோம். இன்று இந்த நல்லாட்சியிலும் முஸ்லிம்களுக்கு மீட்சி கிடைக்கவில்லை என்றால் நாம் யாரிடம் போய் முறையிடுவது? 

 தர்கா நகரில் இரண்டு பேர் உயிரிழந்தார்கள். இரண்டு இளைஞர்களின் கால்கள் கழட்டப்பட்டன. அவர்களுக்கு என்ன நீதியை இந்த நல்லாட்சி  அரசாங்கம் பெற்றுக் கொடுத்தது?
ஆக ஐ.தே.கட்சி காலத்திலும் முஸ்லிம்களுக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. சுதந்திரக் கட்சி காலத்திலும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஐ.ம.சு.கூட்டமைப்பு காலத்திலும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவே யதார்த்தம்.

Q: தற்போது ஆங்காங்கே முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகள் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

உண்மையில் இது கவலைக்குரிய விடயமாகும். கடந்த இரண்டு  வார காலத்தினுள் இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

வெலிமடையில் இரு பெரும்பான்மை இனத்தவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர், பிரேமதாச அரங்கில் இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின்போது முஸ்லிம் இளைஞர்களும் பெரும்பான்மை இன இளைஞர்களும் மோதிக் கொண்டது இன்று சர்வதேச ரீதியாக பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.  தெஹிவளையிலும் இரு தரப்பு முரண்பாடு வெடித்து பின்னர் சுமுக நிலை எட்டப்பட்டுள்ளது. இப்பாகமுவ பள்ளிவாசல் பகுதியில் வாள் வெட்டு நடத்தப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்து போரிட்ட வேளை கொல்லப்பட்டுள்ள சம்பவம் இன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது இந்த நாட்டில் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்துமோ எனும் அச்சம் இப்போது எல்லோர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

எனவேதான் முஸ்லிம்கள் மிகவும் நிதானமான முறையில் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். பெரும்பான்மை சமூகத்தினரின் உணர்வுகளை தூண்டுகின்ற விதமாக நாம் ஒருபோதும் நடந்து கொள்ளக் கூடாது. அண்மையில் கிழக்கு மாகாணத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் கட்அவுட் ஒன்றை 'அல்லாஹு அக்பர்' என்று கோஷமிட்டவாறே கிழித்து வீசுகின்ற வீடியோ காட்சி ஒன்றைப் பார்த்து நான் கவலைப்பட்டேன். இதனை பார்க்கும் பெரும்பான்மை இனத்தவர்கள் தவறான முறையில் விளங்கிக் கொண்டால் எதிர்விளைவுகள் வேறு விதமாகவே இருக்கும். 

எனவே நமது கோபத்தையும் எதிர்ப்பையும் நிதானமாக நாகரிகமான முறையில் வெளிப்படுத்த நாம் பழகிக் கொள்ள வேண்டும். நாம் இந்த நாட்டில் ஒரு நடுநிலையான சமூகமாக வாழத் தலைப்பட வேண்டும். 
இது தேர்தல் காலம் என்பதால் சிலர் முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க தருணம் பார்த்துக் காத்திருக்கிறார்கள். இதற்கு நாம் துணைபோகக் கூடாது.

Q: முஸ்லிம் சிங்கள தேசிய ஒருமைப்பாடு தொடர்பான வேலைத்திட்டத்தின் தலைவர் என்ற வகையில் இந்த விடயங்களை அணுகுவது தொடர்பான உங்கள் ஆலோசனை என்ன? 

இந்த விட­யங்­களை மிகச் சரி­யாக அணு­கு­வ­தாயின் நமக்கு தெ ளிவான கொள்கைத் திட்டம் ஒன்று அவ­சி­ய­மாகும். இதனை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமே தயா­ரித்து நடை­மு­றைப்­ப­டுத்த முன்­வர வேண்டும்.

நான் கடந்த காலங்­களில் முஸ்­லிம்கள் தொடர்பில் தோன்­றிய தப்­ப­பிப்­பி­ரா­யங்­களை களை­வ­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்டேன். நாட்­டி­லுள்ள நான்கு நிகா­யாக்­களின் தலை­வர்­களை சந்­தித்து இஸ்லாம் தொடர்பில் அவர்கள் கொண்­டுள்ள சந்­தே­கங்­களை தெளி­வு­ப­டுத்­தினேன். வேறு சில கடும்­போக்கு பிக்­கு­க­ளையும் சந்­தித்து அவர்­க­ளது சந்­தே­கங்­களை நிவர்த்தி செய்தேன்.

சிங்­கள மொழி மூல அல்­குர்ஆன் மொழி­பெ­யர்ப்பு பிர­தி­களை வாசித்­துள்ள  அவர்கள் சில வச­னங்கள் கூற வரும் செய்­தி­களை தவ­றாகப் புரிந்து கொண்­டுள்­ளார்கள் என்­பதை அறிந்தேன். இத­னா­லேயே இவ்­வா­றான விட­யங்­களை தெளிவு­ப­டுத்­தவும் இன மத நல்­லு­றவைக் கட்­டி­யெ­ழுப்­பவும் ஒரு தேசிய கொள்­கையும் திட்­ட­மிட்ட வேலைத்­திட்­டமும் அவ­சியம் எனக் கரு­து­கிறேன். 

இதனை முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் முன்னெடுப்பதே பொருத்தமானது என்பதே எனது அபிப்பிராயம்.


நன்றி- விடிவெள்ளி

Post a Comment

0 Comments