Subscribe Us

ஒன்பதாயிரம் கோடி பற்றாகியதாக தகவல்: வங்கியின் குளறுபடியால் ஒருநாள் கோடீஸ்வரியாக வாழ்ந்த ஏழைப்பெண்



உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் பகுதியில் வசிக்கும் ஊர்மிளா யாதவ் என்ற பெண், பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா திட்டத்தில் இணைவதற்காக தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ வங்கியின் கிளையில் சில மாதங்களுக்கு முன்னர் இரண்டாயிரம் ரூபாய் செலுத்தி சேமிப்பு கணக்கை துவங்கினார்.

இவரது கைபேசி எண்ணுக்கு சமீபத்தில் வந்த குறுந்தகவலில் ஊர்மிளாவின் சேமிப்பு கணக்கில் ஒன்பதாயிரத்து 571 கோடியே 16 லட்சத்து 98 ஆயிரத்து 647 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊர்மிளா, ஒருநாள் கோடீஸ்வரியாக இன்பக் கனவுகளில் மிதக்க தொடங்கியபோது, அவருக்கு வங்கியில் இருந்து அடுத்த சில நிமிடங்களில் மேலும் ஒரு குறுந்தகவல் வந்தது.

அவரது கணக்கில் 9,99,999 ரூபாய் வரவு வைக்கப்பட்டு அதில் 9,97,000 ரூபாய் எடுக்கப்பட்டது போக மீதம் 2 ஆயிரம் ரூபாய் கிடப்பதாக அடுத்தடுத்து வந்த குறுந்தகவல்களை அடுத்து, வங்கிக்கு நேரடியாக சென்ற ஊர்மிளா யாதவ், மேற்படி பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்கள் அனைத்தையும் தனது ‘பாஸ்புக்’கில் வரவும் வைத்துக் கொண்டு திரும்பி வந்துள்ளார்.

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள வங்கி அதிகாரிகள், ஊர்மிளா கணக்கு தொடங்கும்போது கட்டிய 2 ஆயிரம் ரூபாயையும் முழுமையாக துடைத்து எடுத்து விட்டதால் அந்த கணக்கை மூட நினைத்த வங்கி அதிகாரிகள், அவரது வரவு-செலவு தொடர்பான விபரங்களை கணக்கிடும் போது இந்தப் பிழை நேர்ந்து விட்டதாக தெரிவித்தனர்.


Post a Comment

0 Comments