Subscribe Us

அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பிக்க இணக்கத்திற்கு வர வேண்டும்: மாதுளுவாவே சோபித தேரர்


அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டம் சம்பந்தமான முரண்பாடுகள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கத்திற்கு வருமாறு, நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாதுளுவாவே சோபித தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் கோரிக்கையை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடம் அவர் விடுத்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து, புதிய தேர்தல் சீர்திருத்தத்தை மேற்கொள்வது மாத்திரமல்லாது 17வது திருத்தச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவதாகவும் தற்போதைய ஜனாதிபதி பதவிக்கு வரும் முன்னர் வாக்குறுதியளித்திருந்தார்.

100 நாள் வேலைத்திட்டம் தொடர்பில் எந்த பிரச்சினைகளும் இல்லை. ஆனால், மேற்படி மூன்று விடயங்களை நிறைவேற்றாது தேர்தலுக்கு செல்ல முடியாது எனவும் மாதுளுவாவே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதிநிதிகளுடன் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

19வது திருத்தச் சட்டம் தொடர்பில் சம்பிக்க ரணவக்க கொண்டுள்ள நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படக் கூடும். எனினும் அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்த உதவியவர்களின் முக்கியமானவர்களில் ஒருவரும் அமைச்சரவையில் அங்கும் வகிக்கும் நபர் என்பதால், இது குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு கோருவதாகவும் சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால், அதே விதமாக சட்டத்திருதத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments