Subscribe Us

''நாட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்'' - மஹிந்த ராஜபக்ஸ

சிறிலங்கா சுதந்திர கட்சியை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கிலேயே அதன் தலைமைத்துவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் எப்பாவல பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி இன்று முற்பகல் மிஹிந்தலையில் உள்ள விகாரைக்கும் சென்று சமய நிகழ்வுகளில் ஈடுபட்டார். பின்னர் அவர் செய்தியாளர்கள் மத்தியில் கருத்துவெளிட்டார்.

தனிப்பட்டவர்களிடம் பழிவாங்கல்களை மேற்கொள்ளும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. பத்திரிகைகளிலும் இதுபற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன.

காவல்துறை மா அதிபரோ, சட்டமா அதிபரோ கூற வேண்டிய விடயங்களை அரசியல்வாதிகள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பிட்டவர்களை கைது செய்துள்ளோம், இவ்வளவு காலத்திற்கு தடுத்துவைப்போம் என்று அவர்கள் கூறுகின்றனர். சிறப்பான ஆட்சி இதுதான் என்றால் நாட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

இதேவேளை, கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாகவும் செய்தியாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வியெழுப்பியுள்ளனர்.

அதன் பணிகள் நிறுத்தப்படும் என நான் நினைக்கவில்லை அப்படி நிறுத்தப்பட்டால் அது நியாயமற்ற செயல். அந்த செயற்றிட்டத்தை நிறுத்தினால் இன்று 100 அல்லது 200 வருடங்களுக்கு இதுபோன்ற ஒன்றை நிர்மாணிக்க முடியாது.

அதனை நிறுத்தினால் நாடு மேலும் பின்னோக்கி சென்றுவிடும். நாட்டை ஆட்சி செய்பவர் மாற்றப்பட்டாலும் அபிவிருத்தி பணிகள் நிறுத்தப்படக் கூடாது. அவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவேண்டும்.

பொதுமக்களின் ஆணை எவ்வாறு அமைகின்றது என்பது முக்கியமில்லை. ஆனால் புதிய அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளை நிறுத்தினால் அதன் நோக்கத்தை பொதுமக்கள் புரிந்து கொள்ளவேண்டும். பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு குறித்த செயற்றிட்டம் செயற்படுத்தப்படும் என நான் நினைக்கிறேன்.

Post a Comment

0 Comments