Subscribe Us

தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள்..


நாடாளுமன்றம், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களுக்கு அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய 8 வரைமுறைகளை பெப்ரல் மற்றும் பிரஜைகள் ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ளன.

பெப்ரல் மற்றும் பிரஜைகள் ஆகிய அமைப்புகள் நேற்று இந்த 8 வரைமுறைகளை கொழும்பில் வெளியிட்டுள்ளன. இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், பொது அமைப்புகளின் பிரதிநிதிதகளும் கலந்து கொண்டனர்.

1 – குற்றம் ஒன்றுக்காக சிறைக்கு சென்றவர் அல்லது ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டவராக இருக்கக் கூடாது.

2 -இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றவாளியாக இருக்கக் கூடாது என்பதுடன் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நபராக இருக்க வேண்டும். அத்துடன் இலஞ்சம் மற்றும் ஊழல் சம்பந்தமாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும்.

3 – மதுபானம், போதைப் பொருள், சூதாட்டம், கசினோ, பாலியல் தொழில் நிலையம் உட்பட நாட்டுக்கு கேடுவிளைவிக்கும் தொழிலை செய்யாதவராகவும் கடந்த காலத்தில் அந்த தொழில்களை செய்தவாராகவும் இருக்கக் கூடாது. 

4- உயிர் வாழ்வதற்கான ஆதாரங்களை அழித்து, சுற்றாடலுக்கு அழிவுகளை ஏற்படுத்தும் தொழிலில் ஈடுபட்ட அல்லது ஈடுபடும் நபராக இருத்தல் கூடாது. 

5- மக்கள் பிரதிநிதியாக தெரிவாகும் முன்னர், நாட்டுக்கு கேடான முறையில்
தான்தோன்றித்தனமாக நிதி ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொண்ட, மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு தனது அரசியல் பலத்தை முறைகேடாக பயன்படுத்தி அரசுடன் நிதி ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொண்ட மற்றும் ஒப்பந்தத்தின் ஒரு தரப்பாக இருந்தவராக இருக்கக் கூடாது. 

6 – வேட்புமனு வழங்கப்படும் வேட்பாளர் தமது பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் , அந்த பிரதேசத்தில் வசிப்பராக இருத்தல் வேண்டும் என்பதுடன் அங்குள்ள மக்களுடன் தொடர்புகளை கொண்டவராக இருக்க வேண்டும். 

7- வேட்புமனுக்களை வழங்கும் போது பெண்கள் மற்றும் இளம் பிரதிநிதிகளுக்கு போதிய சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும். 

8- அரசியல் பலத்தை முறைகேடாகவும் மோசடியாகவும் பயன்படுத்தாத நபராக இருத்தல் வேண்டும். 

Post a Comment

0 Comments