ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தினை ஆதரிக்க வேண்டும் என்பதற்காகவே தேசிய அரசாங்கத்தினை ஆதரிக்கின்றோம். நாம் விட்டுக்கொடுப்புடனும் எமது கட்சியின் தலைமைத்துவத்துக்குக் கட்டுப்படுவதனாலுமே ரணில் விக்கிரமசிங்க பிரதமராகியுள்ளார் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நூறு நாட்கள் மட்டுமே இந்த அரசாங்கம் இருக்குமென நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெ ளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவம் மாற்றமடைந்துள்ளதே தவிர கட்சியில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை. அதேபோல் உண்மையான அரசாங்கம் எதுவென்பதில் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் ஜக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு ஜனாதிபதியாகவுள்ளார். தற்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஆவார். அதேபோல் பாராளுமன்றில் பெரும்பான்மை எம்மிடம் உள்ள போதும் ஜக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில்விக்கிரமசிங்க பிரதமராகியுள்ளார். இவ்வாறானதொரு குழப்பத்தில் தேசிய அரசாங்கம் நகர்கின்றது. எனினும் நாம் விட்டுக்கொடுப்புடனும் எமது கட்சியின் தலைமைத்துவத்துக்கு கட்டுப்படுவதனாலுமே ரணில் விக்கிரமசிங்க பிரதமராகியுள்ளார். பாராளுமன்றின் பெரும்பான்மை எமக்கு உள்ள போதிலும் 49 ஆசனங்களுடன் உள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கே பிரதமர் மற்றும் அமைச்சுப்பதவிகள் கிடைத்துள்ளன.
எனவே எமது விட்டுக்கொடுப்பு மற்றும் எமது கட்சியின் கட்டளையினை மதிப்பதன் காரணத்தினாலுமே ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைத்துள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது. இம்முறைமை அடுத்த பொதுத்தேர்தலில் மாற்றமடையும். இம்முறை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தலைமைத்துவ மாற்றத்தினை ஏற்படுத்தி நல்லாட்சியினை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே தேசிய அரசாங்கம் உருவாகியுள்ளது. இதன் போது தேசிய அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தினை ஆதரிக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டதற்கமைய நாம் இவர்களின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தினை ஆதரித்துள்ளோம். இன்று 50 நாட்கள் முடிவடைந்துள்ளன. எஞ்சியுள்ள 50 நாட்கள் வரையில்தான் இவர்களுடன் எமது உறவு இருக்கப்போகின்றது. எனவே இதுவரையில் இவர்கள் செய்தது என்ன ?எஞ்சியுள்ள நாட்களில் இவர்கள் செய்யப்போவது என்னவென்பது தொடர்பில் நாம் பா ர்த்துக்கொண்டிருக்கின்றோம்.
ஜக்கிய தேசிய கட்சியின் இவ் ஆட்சி வெறும் நூறு நாட்கள் மட்டுமே என்பதை இவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் எப்படியும் பொதுத்தேர்தலுக்கு சென்றாக வேண்டும். எனவே அடுத்து வரவிருக்கும் பொதுத்தேர்தலின் போது ஆட்சியமைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானங்களை மேற்கொண்டு வருகின்றது. கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் கலந்தாலோசித்து வருகின்றோம். அதேவேளை அடுத்த பொதுத்தேர்தல் நடத்தப்படுமாயின் அரசியல் அமைப்பு மாற்றத்துடனேயே இடம்பெற வேண்டும். வெறுமனே 18 வது திருத்தத்தினை இல்லாதொழித்து 19ஆவது திருத்தத்தினை கொண்டு வருவதால் மட்டும் பலனில்லை. தேர்தல் முறையிலும் மாற்றத்தினை கொண்டு வர வேண்டும். ஜனாதிபதி ஓர் கட்சியிலும் பிரதமர் அதே கட்சியிலும் இருக்கும் வரையில் அரசாங்கம் சிறப்பாக கொண்டு செல்ல முடியும். ஆனால் ஜனாதிபதி ஒரு கட்சியாகவும் பிரதமர் வேறு கட்சியாகவும் இருக்கும் பட்சத்தில் சிக்கல்கள் ஏற்படும். 2001 ம் ஆண்டும் இந்நிலைமை ஏற்பட்டது. எனவே இதனை தடுக்க வேண்டுமாயின் தேர்தல் முறைமையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


0 Comments