Subscribe Us

ஜெயவர்த்தனே அதிரடி வீண்: வில்லியம்சன் சதத்தில் இலங்கையை வீழ்த்தியது நியூசிலாந்து (PHOTOS)

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

இவ்விரு அணிகள் மோதிய 4வது ஒருநாள் போட்டி இன்று நெல்சன் மைதானத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

அதன் படி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 276 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்பத்தில் வேகமாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இறுதி கட்டத்தில் விக்கெட்களை இழந்து பின்னடைவை எதிர்கொண்டது. இலங்கை அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீர்கள் பெரிதாக சோபிக்கவில்லை.

இலங்கை அணி சார்பில் மஹேல ஜெயவர்த்தனே அதிரடியாக விளையாடி 94 ஓட்டங்களைப் பெற்றார். குமார் சங்கக்காரா 76 ஓட்டங்களையும், டில்ஷான் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியின் தலைவர் உள்ளிட்ட ஆறு வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் நியூசிலாந்து சார்பில் டிம் சவுதி 3 விக்கெட்களையும், மில்னே மற்றும் மெக்லெங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பின்னர் 277 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 280 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பில் வில்லியம்சன் அபாரமாக ஆடி 103 ஓட்டங்களைப் பெற்றார். எல்லியொட் 44, என்டர்சன் 47, ரொன்சி 32 ஓட்டங்களைப் பெற்றனர்.

சதம் விளாசிய வில்லியம்சன் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 7 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது.

Post a Comment

0 Comments