இலங்கை அணியின் மூத்த வீரர்களான மஹேல ஜயவர்த்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் திட்டத்தினை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் கைவிட்டுள்ளது.

உலக இருபது 20 கிண்ண வெற்றியைத் தொடர்ந்து தாயகம் திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணி விமானநிலையத்தில் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்தது. இதன்போது தமது இருபது20 கிரிக்கெட் ஓய்வு குறித்து பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தினை மஹேல மற்றும் சங்கக்கார ஆகியோர் சாடியமை சர்ச்சைக்கு வழி வகுத்தது. உலக இருபது20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பாக இவர்கள் தெரிவித்த கருத்துக்கள் தவறாக ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.


இதனால் இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து காரசார விவாதங்கள் இடம்பெற்று வந்தன. அத்துடன் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஒழுக்காற்று குழுவுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பணித்திருந்தது.

இந்நிலையில் 'இரு வீரர்களுடனும் பேசி பிரச்சினை சுமுகமாக முடித்துக்கொள்ளப்பட்டுள்ளது' என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஜயந்த தர்மதாஸ நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் மஹேலவும் சங்கக்காரவும் செயலாளர் நிசாந்த ரணதுங்கவுடன் சுமுகமாக பேச்சுக்களில் ஈடுபட்டதாகவும் அக்கூட்டத்திலேயே இம்முடிவு எட்டப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இந்த பொதுக் கூட்டம் குறித்து தகவல்கள் வெளியிட ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிசாந்த ரணதுங்க மறுத்துள்ளார்.