Subscribe Us

சமூகமே விழி..! புத்தளத்தில் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம்

அளவற்ற அருளாளனும்,நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் நாமம் கூறி ஆரம்பிக்கின்றோம்.

அன்பின் எமது சொந்தங்களே! இளைஞர்களே! பெரியோர்களே! சமூக ஆர்வலர்களே! புத்தி ஜீவிகளே! 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ

ஸாஹிறா தேசிய பாடசாலைக்கான புதிய அதிபர் நியமனம், அதனைத் தொடர்ந்து உருவான பிரச்சினைகள், இதனை சாட்டாகக்கொண்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளை தொடர்பில் எழுந்த விமர்சனங்கள், கட்டுக்கதைகள், அவதூறுகள், வீண்பழிகள் தொடர்பில் எமது நிலைப்பாட்டை பலர் வேண்டிக்கொண்டதற்கிணங்க அல்லாஹ்வை சாட்சியாகக் கொண்டு உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்

அன்பானவர்களே! அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம். இஸ்லாம் என்பது ஒரு சம்பூரண வாழ்க்கை நெறி. அதனை ஏற்று விசுவாசித்து, பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்ற  முஸ்லிம்கள் நாங்கள். இஸ்லாம் வாழ்வியலின் சிறிய, பெரிய எல்லா விடயங்களிலும், எல்லாத் துறைகளிலும் வழிகாட்டக்கூடிய ஒரு வாழும் வாழ்க்கை நெறியாகும். இந்த வாழ்க்கை நெறியை அதன் மூலாதாரங்களான அல் குர்ஆன், அல் ஹதீஸ், ரஸூல் (ஸல்) அவர்களின் ஸீரா ஆகியவற்றின் வெளிச்சத்தில் கடந்த சுமார் 50 வருடங்களாக எம்மூரில் மக்கள் முன் சமர்ப்பித்து, பிரச்சாரம் மேற்கொண்டு  ஆன்மீக வழிகாட்டலையூம், அறிவூப் பணிகளையூம், சமூகப் பணிகளையும் தொய்வின்றி ஆற்றிவரும் ஜமாஅத்தே இஸ்லாமியை தாங்கள் நன்கறிவீர்கள்.

மேற்குறித்த பணிகளின் விளைவாக இவ்வூரில் மதிக்கத்தக்க ஆற்றலுள்ள ஆளுமைகள், நேரிய சிந்தனைப் படைத்த துடிப்புள்ள இளவல்கள், இலட்சிய வேட்கைக் கொண்ட குடும்பப் பெண்கள், யூவதிகள், மக்கள் பணிக்காக திறந்துவிடப்பட்ட பல நிறுவனங்கள் என்பன இஸ்லாமிய சமூக அமைப்பை நோக்கிய எமது பயணத்தில் யாரும் மறுத்துரைக்க முடியாத அடையாளச் சின்னங்கள்.

எனவே ஜமாஅத்தே இஸ்லாமி வெறும் பிரச்சார இயக்கமல்ல; மாறாக வாழ்வின் சகல துறைகளிலும் இஸ்லாத்தை நிலை நாட்டுவதும், இஸ்லாமிய சமூக அமைப்பை தோற்றுவிப்பதும் “தூய தேசம்; மன்னிக்கும் இரட்சகன்” (ஸூறா சபஉ: 15) எனும் தூர நோக்கோடு பயணிக்கும் சமய, சமூக இயக்கமாகும் என்பதை தாழ்மையுடன் பறைசாற்றுகின்றோம். எனவேதான் சமய பிரச்சார பணிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போன்று சமூகப் பணிகளுக்கும்  சம அளவிலான முக்கியத்துவத்தை நல்கி செயல்;பட்டுவருகின்றோம். 

கனவான்களே! ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளை தொடராகவும், அவ்வப்போதும் ஆற்றிவரும் சமூகப் பணிகளை உற்று நோக்கிப் பாருங்கள்! சிந்தியுங்கள்!! 

வருடாவருடம் இஸ்லாமிய விழுமியங்களுடன் கூடிய முன்பள்ளி பயிற்சியை 150ற்கும் மேற்பட்ட சிறார்களுக்கு வழங்கிவரும் ரவ்ழதுல் அத்பால் பாலர் பாடசாலை, பள்ளிப்பருவத்தில் புனித அல்குர்ஆனை தர்தீலாய் ஓதிட, அதனை எளிமையாய் விளங்கிட, இஸ்லாமிய அறநெறிகளை அறிந்திட அல் குர்ஆன் பிரிவு, ஹிப்ழ் பிரிவு, ஷரீஆ கற்கை என சுமார் 500 மாணவர்களை தன்னகத்தே கொண்டு இயங்கும் மதுரசதுல் இஸ்லாமிய்யா,  பல்கலைக்கழக பட்டப்படிப்புடன் ஷரிஆ துறை உயர்கல்வியை வழங்கி, இதுவரை 445 ஆலிமாக்களை சமூகத்திற்கு வழங்கியும், தற்போது 186 மாணவிகளை அதற்காய் பயிற்றுவிக்கும் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி, க.பொ.த சாதாரணதர, உயர்தர மாணவர்களுக்காக நடாத்தப்படும் இஸ்லாமிய பயிற்சி நெறிகள், கல்வி வழிகாட்டல்கள், கருத்தரங்குகள், தொய்வின்றி நடாத்தப்படும் அல் குர்ஆன்,அல் ஹதீஸ் மஜ்லிசுகள்,  சிறியோர் முதல் பெரியோர் வரை இஸ்லாத்தினை தெளிவாக விளங்கிடும் வகையில் அமைந்த அஸாபிர், ஜம்இய்யா, தாலிபாத், பெண்களுக்கான நிகழ்ச்சிகள்,  முஅய்யித் பயிற்சி நெறிகள் என அறிவு சார்ந்த விடயங்களுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கி காத்திரமாக செயற்பட்டுவருகின்றது.  

அத்துடன் நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் என ஊருக்கும்,நாட்டுக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு மருத்துவச் சேவையினை வழங்கிடும் குவைத் வைத்தியசாலை, IHH மருத்துவ நிலையம், வறுமைக்கோட்டின் கீழ்  வாழும் சுமார் 300 க்கும் அதிகமான குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவூம் செரண்டிப் முதலீட்டுத் திட்டம், புத்தளத்தில் 203  அநாதைச் சிறார்களை பராமரிக்கும் அநாதைகள் பராமரிப்பு பிரிவு, உலர் உணவு வழங்கல், இப்தார், உழ்ஹிய்யா என பருவக்கால செயல்பாடுகள், அனர்த்த நிலமைகளின் போது தனியாகவும், கூட்டாக இணைந்தும் நல்கிடும் பங்களிப்புகள், மணல்குன்று பைதுஸ் ஸகாத் வீடமைப்புத் திட்டம் என பல்வேறு  சமூகப் பணிகளில் கால்பதித்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! 

இவ்வாறான இன்னோரன்ன எமது சமூகப் பணிகளின் மூலம் இவ்வூரில் எவ்வித வேறுபாடுகளும் இன்றி பலரும்  பயனடைந்துவருகி;ன்றனர். ஏன்! எமது சகோதர அமைப்பினர்கள் கூட பயன்பெறுகின்றனர்; பல சமூகம் சார் நிகழ்ச்சிகளில் புரிந்துணர்வோடு எம்முடன் இணைந்து பங்கேற்கவும் செய்கின்றனர்.

பொதுவாக ஒரு இஸ்லாமிய இயக்கம் விரிவடைந்து சமூகப் பணிகளை அதிகரிக்கும் போது அங்கு நிதி சம்பந்தப்படுவது இயல்பானதே. ஜமாஅதே இஸ்லாமி நிதி தொடர்பாடல்களை ஷரீஆ கண்ணோட்டத்தில் நோக்குவதை விதியாக ஏற்றுள்ளது. இக் கொள்கைக்கமைவாக கணக்கியல் நியமங்களை நிதி கொடுக்கல் வாங்கல்களில் கண்டிப்பாக பின்பற்றிவருகின்றது. எமது நிறுவனங்களில், சமூகப் பணிகளில் குறிப்பாக குவைத் வைத்திய சாலை, இஸ்லாஹிய்யா, உழ்ஹிய்யா செயற்றிட்டம் போன்றவற்றில் ஊழல், மோசடிகள், நிதி  கையாடல்கள்; உள்ளன என்பன போன்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் யாரும் முதலில் தன்னை சரியாக, உண்மையாக அடையாளப்படுத்தி, ஆதாரங்களுடன் எழுத்து மூலம் அறியத்தந்தால் அதனை ஜமாஅத் நிச்சயம் கவனத்திற்கொண்டு, விசாரித்து தகுதி தராதரம் பாராது தகுந்த நடவடிக்கை எடும் என்பதை பொறுப்புடன் சொல்லிக்கொள்கின்றது. 

அதேவேளை எம் மீது காழ்புணர்ச்சி கொண்டோ, சமூகத்திலிருந்து எம்மை தூரப்படுத்து வதற்காகவோ, சக இயக்கங்களுடனான சுமுக உறவை சீர்குழைக்கின்ற பிரித்தாளும் தந்திரத்துக்காகவோ, பிழையான ஊகங்களினால் உந்தப்பட்டு அல்லது வழிகாட்டப்பட்டு பழிவாங்கும் எண்ணங்களுக்காகவோ, தமக்கான அரசியல் இருப்புக்கு சவாலாக அமையும்; என்ற பயத்திற்காகவோ, தனிப்பட்டவர்களின் சுய இலாபங்களுக்காகவோ  நேரடியாகவூம், மறைமுகமாகவூம், அனாமதேய துண்டுப்பிரசுரங்கள் மூலமாகவும்  எம்மீது சுமத்தப்பட்ட போலிக் குற்றச்சாட்டுக்கள், அபாண்டங்கள், கட்டுக்கதைகளை; அனைத்தையும் அல்லாஹ்வின் மீது ஆணையாக உறுதியாய் மறுக்கின்றோம். எமது வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

எம் மீது பழிசுமத்துபவர்களே! அதனை அங்கீகரிப்பவர்களே! அதற்கு துணைபோகின்றவர்களே! அபாண்டம் ஷரீஅத்தில் தடுக்கப்பட்ட சமூகத்தில் மலிந்துவிட்ட பெரும் பாவமாகும். இது குறித்து அல் குர்ஆன் இவ்வாறு அச்சமூட்டி எச்சரிக்கின்றது.

“எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையூம்இ பெண்களையூம் அவர்கள் செய்யாத குற்றத்தை(ச் செய்ததாக)க் கூறித் துன்புறுத்துகி;ன்றார்களோ அவர்கள்இ நிச்சயமாக (பெரும்) அவதூற்றையூம்இ பகிரங்கமான பாவத்தையூமே சுமந்து கொள்கின்றனர்” (ஸூறா அல் அஹ்சாப் : 58)

“நீங்கள் இந்த அபாண்டத்தை சாமான்யமான விடயமாக கருதுகின்றீர்கள். அது அல்லாஹ்விடத்தில் பாரதூரமானதாகும்.” ( ஸூறா அந் நூர் 15)

வீண்பழி சுமத்தப்பட்ட ஜமாஅத்தின் அங்கத்தவர்கள் அநியாயமிழைக்கப்பட்டவர்களாவர். அவர்களது கையில் இருப்பது அரசியல் பலமோ, குண்டர்கள் பலமோ அல்ல. “துஆ” எனும் பலமே. அதற்கு பயந்துகொள்ளுங்கள். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “அநியாயமிழைக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைக்குப் பயந்து கொள்ளுங்கள்.  அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் எந்தத் திரையும் இல்லை” (புஹாரி,முஸ்லிம்)

சத்தியப்பாதையில் இலட்சியப் பயணம் மேற்கொள்ளும் போது எதிர் சக்திகளால் இத்தகைய குற்றச் சாட்டுக்கள், பரிகசிப்புகள் அரங்கேற்றப்படுவது ஒன்றும் புதிதல்ல. இதற்கு இஸ்லாமிய வரலாறே சான்று. இந்த வரலாற்று உண்மையைப் புரிந்த ஜமாஅத் இத்தகைய சலசலப்புகளுக்கு அஞ்சி என்றும் பின்வாங்கப்போவதுமில்லை. அல்லாஹ்வின் துணைகொண்டு எமது சமய, சமூகப் பணிகள் வழமைபோன்று தொடரும். சமூக நலனே எங்கள் நோக்கு : இறை திருப்தியே எங்கள் இலக்கு! இன்ஷா அல்லாஹ்!!

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி - புத்தளம் கிளை
இல 11, வான் வீதி, புத்தளம். 
2013.12.23.

(நன்றி:ஜப்னா முஸ்லிம்; இணையதளத்தில் இருந்து)

Post a Comment

0 Comments