அமெரிக்கா விடுத்த கடுமையான
எச்சரிக்கைக்கு பணிந்து ஈரானிடம்இரகசியமாக எண்ணெய் கொள்வனவு செய்வதை
சிறிலங்கா அரசாங்கம் நிறுத்தியுள்ளது. இதனால், ஈரானிய எண்ணெயை மட்டும்
சுத்திகரிக்கும் வசதியைக் கொண்டுள்ள, சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு
ஆலை மூடப்பட்டுள்ளதுடன், சிறிலங்காவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம்
என்ற அச்சமும் எழுந்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை
மீறும் வகையில், மூன்றாவது தரப்பு ஊடாக, ஈரானிய எண்ணெயை சிறிலங்கா
அரசாங்கம் கொள்வனவு செய்து வந்தது. இதுபற்றிய புலனாய்வுத் தகவல்
அமெரிக்காவுக்கு கிடைத்ததை அடுத்து, அண்மையில் சிறிலங்காவுக்கான அமெரிக்கத்
தூதுவர் மிச்சேல் ஜே சிசன்(Michelle J sison) அலரி மாளிகையில், சிறிலங்கா
அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து கடுமையான எச்சரிக்கை விடுக்கும்
இராஜாங்கத் திணைக்களத்தின் செய்தியை கையளித்திருந்தார்.
ஈரானிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு
செய்வதை சிறிலங்கா அரசாங்கம் நிறுத்திக் கொள்ளாவிடின், கடுமையான விளைவுகளை
சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் எச்சரிக்கை
விடுத்திருந்தது. இதனையடுத்து, கடந்த மாதம் 19ம் மற்றும், 27ம் தேதிகளில்
சிறிலங்காவுக்குப் புறப்படவிருந்த இரண்டு எண்ணெய்க் கப்பல்களை சிறிலங்கா
நிராகரித்துள்ளது.
ஈரானிய எண்ணெய் ஏற்றப்பட்டிருக்கலாம் என்ற
சந்தேகத்தின் பேரிலேயே இவை நிறுத்தப்பட்டதாக சிறிலங்கா பெட்ரோலியக்
கூட்டுஸ்தாபன முகாமைத்துவப் பணிப்பாளர் சுசந்த சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று கொழும்புத் துறைமுகத்துக்கு வரவேண்டிய 180 ஆயிரம் மெட்ரிக்
தொன் எண்ணெய் ஏற்றிய கப்பல் தொழில்நுட்பக் கோளாறினால், கொழும்பு வருவதில்
தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சபுகஸ்கந்தை சுத்திகரிப்பு ஆலையை மூன்று
நாட்கள் மூடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு ஆலை
மூடப்படுவதால், சிறிலங்காவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று
அச்சம் எழுந்துள்ள போதிலும் அதை சுசந்த சில்வா நிராகரித்துள்ளார். எனினும்,
காமன்வெல்த் மாநாடு நடக்கவுள்ள சூழலில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால்
சிறிலங்காவுக்கு அவமானமாகி விடும் என்பதால், அவர் அவ்வாறு கூறியிருக்கலாம்
என்று கருதப்படுகிறது.
இதனிடையே, சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை
வெளிநாடுகளில் இருந்து அவசரமாகப் பெற்றுக் கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம்
அவசர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Comments