அமெரிக்காவில், தீபாவளி பண்டிகையை முதன்முறையாக அந்நாட்டு நாடாளுமன்றம் சார்பில் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடைபெற உள்ள தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் கட்சிப் பாகுபாடின்றி, நாடாளுமன்றத்தின் இருசபை உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இந்திய-அமெரிக்கர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவரும், சபை உறுப்பினருமான ஜோ க்ரோலி கூறியது:
லட்சக்கணக்கான இந்திய மற்றும் அமெரிக்க இந்தியர்களின் முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாக தீபாவளி திகழ்கிறது. இப்போது, இந்த பண்டிகையை முதன்முறையாக அமெரிக்க நாடாளுமன்றம் கொண்டாட சம்மதம் தெரிவித்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் நானும் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்.இரு சபைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்க-இந்தியத் தலைவர்களும் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். இது வெறும் பண்டிகை கொண்டாட்டம் மட்டுமல்ல. பல்வேறு கலாசார மரபுகள் மற்றும் வரலாறுகளைப் புரிந்து கொள்ளவும், உறவைப் பலப்படுத்தவும் இந்தப் பண்டிகை உதவும். இதனால் அமெரிக்க-இந்தியர்கள் மட்டுமின்றி, அமெரிக்கர்களும் பயன்பெறுவர் என்று தெரிவித்தார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் முதல் இந்து மத உறுப்பினரான துளசி கபார்டு கூறுகையில், “இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு மூலம் தீபாவளிப் பண்டிகை குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும்’ என்றார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்ததை அமெரிக்க-இந்தியர்கள் வரவேற்றுள்ளனர்.

0 Comments