கல்முனை மாநகர மேயர் பதவி தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள்
மீண்டும் இழுபறி நிலை தோன்றியுள்ளதாகத் தெரியவருகின்றது.
சுழற்சி அடிப்படையில் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மேயர் பதவியை இராஜினாமா செய்யுமாறு தற்போதைய மேயர் மீராசாஹிபு சிராஸ், கட்சித் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் நேரடியாக கேட்கப்பட்டுள்ளார்.
2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது.
தேர்தலில் முதன்மை வேட்பாளராக கட்சியின் துணைச் செயலாளர் நிசாம் காரியப்பர் நிறுத்தப்பட்ட நிலையில் அவரே தேர்தலின் பின்னர் மேயராக தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தேர்தல் முடிவுகளின்படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விருப்பு வாக்குகளில் மீராசாஹிபு சிராஸ் முதலாவது இடத்தை பிடிக்க நிசாம் காரியப்பர் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
தேர்தல் விருப்பு வாக்குகள் எப்படி இருந்தாலும் நிசாம் காரியப்பரை அந்தப் பதவிக்கு நியமிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை விரும்பியதாக சில உள்ளூர் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் கூடுதல் விருப்பு வாக்கு பெற்ற மீராசாஹிபு சிராஸுக்குத் தான் பதவி வழங்கப்பட வேண்டும் என்று ஒரு சாரர் கட்சிக்கு உள்ளேயும் ஆதரவாளர்கள் மத்தியிலும் கோரிக்கை வைத்தனர். அதன் காரணமாக அப்போது இழுபறி நிலை தோன்றியிருந்தது.
கட்சித் தலைமைப்பீடம் இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் 4 வருட பதவிக்காலத்தில் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளை குறித்த இருவருக்கும் தலா இரண்டு வருடங்கள் என சுழற்சி அடிப்படையில் வழங்க முடிவு செய்தது.
முதல் இரு வருடங்களுக்கு மேயராக மீராசாஹிபு சிராஸும் துணை மேயராக நிசாம் காரியப்பரும் நியமனம் பெற்று பதவி வகித்து வருகின்றார்கள்.
பதவி விலக மறுப்பு
முதல் இரு வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மாநகர மேயரை அழைத்து பதவி விலகுமாறு கேட்டுள்ள போதிலும் மாநகர மேயர் தன்னால் இது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாது என பதில் அளித்துள்ளதாக தெரியவருகின்றது.
விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தன்னை தெரிவு செய்த தனது பிரதேச வாக்காளர்களுடன் பேசியே முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பாக மீண்டும் எழுந்துள்ள பிரச்சினை பற்றி கட்சியின் சகல மாநகர சபை உறுப்பினர்களையும் ரவூப் ஹக்கீம் அழைத்து ஆராயும் கூட்டமொன்றை இறுதியாக கொழும்பில் நேற்று மாலை கூட்டியிருந்தார். 11 உறுப்பினர்களில் மாநகர மேயர் உட்பட 3பேர் இக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கல்முனை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் எச். எம். ஹாரிஸும் அங்கு சமூகமளித்திருக்கவில்லை என தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.
இதேவேளை துணை மேயர் நிஸாம் காரியப்பருக்கு எதிராக சாய்ந்தமருது பிரதேசத்தில் சுவரொட்டிகள் சில இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதை காணக் கூடியதாக உள்ளது.


0 Comments